கண்டி எசல பெரஹராவை பார்வையிடச் சென்ற சிறுவனை கடத்திய நபருக்கு ஓகஸ்ட் 19 வரை விளக்கமறியல்

கண்டி எசல பெரஹராவை காணச் சென்ற எட்டு வயது சிறுவனை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை ஓகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்டி நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

குறித்த சந்தேக நபர் புகையிரதத்தில் அவிசாவளை நோக்கி சென்று கொண்டிருந்த போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்து கொண்டமையால் அவர் பயணிகளால் பிடிக்கப்பட்டு மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரும் சிறுவனும் கண்டி பொலிஸ் நிலையத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் போது, ​​சந்தேகநபர், சிறுவனின் பாட்டியை தனக்குத் தெரியும் என்றும், சிறுவனை பொம்மைகள் வாங்க அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

எனினும் சிறுவனின் பாட்டியும் தாயும் அந்த நபரை தாங்கள் பார்க்கவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

குறித்த நபர் இதற்கு முன்னரும் குழந்தையொன்றை கடத்த முயற்சித்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறுவனை வைத்திய பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.