மாணவர்கள் தொழிலுக்கு செல்ல முடியும் என்ற கருத்தானது அவர்களின் கல்வி உரிமையை இல்லாமல் செய்யும்;… (இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்க உபதலைவர் – ஜீ.ருபேசன்

(சுமன்)

மாணவர்கள் தொழிலுக்கு செல்ல முடியும் என்ற கருத்தானது தொடர்ச்சியாக அவர்களின் கல்வி உரிமையை இல்லாமல் செய்யும் வாய்ப்புகளை எதிர்காலத்தில் உருவாக்கி விடும். கொவிட் மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக இன்றும் கல்வியை இழந்த மாணவர்களின் கல்வி கற்கின்ற உரிமையைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது என இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் ஜீவராசா ருபேசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் அமைச்சர் மனுச நாணயகார அவர்கள் பாடசாலை மாணவர்களும் தொழில் மேற்கொள்ளலாம் என்றவாறான கருத்தை முன்வைத்திருந்தார். தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமையின் பிரகாரம் அக்கருத்தைப் பார்த்தாலும் அவ்வாறு மாணவர்கள் தொழில் மேற்கொள்வதற்கான அடிப்படைகள் எவற்றையும் அவர் முன்வைக்கவில்லை.

தற்போதைய எமது நாட்டின் பொருளாதார நிலைமையில் பல மாணவர்ககள் தங்களின் குடும்பச் சுமைகளைச் சுமக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறான மாணவர்களுக்கு அமைச்சர் கூறிய பாடசாலை மாணவர்கள் தொழில் புரியலாம் என்ற கருத்துக்கு அமைவாக அவர்கள் தொழிலுக்குச் சென்று பணத்தினைக் கைகளில் பெற்றுக் கொள்கின்ற போது அவர்கள் தனது கல்;வியை விட்டு பணத்தின் பால் ஈர்க்கப்பட்டு கல்வியைத் தொடர முடியாமல் இடைவிலகல்கள் பலவும் இடம்பெற வாய்ப்புகள் இருக்கின்றது.

அது மட்டுமல்லாது சிறுவர் தொழில் தொடர்பாக சர்வதேச அமைப்புகள், ஆய்வாளர்கள் பலரும் எதிர்த்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் இலங்கையில் பாடசாலை மாணவர்களைத் தொழிலில் அமர்த்தலாம் என்று கூறப்படுகின்றது. இது தொழில் வழங்கும் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமையலாம். மாணவர்கள் தொழிலுக்குச் செல்லாம் என அமைச்சர் குறிப்பிட்ட போதிலும் இந்த மாணவர்கள் எவ்வாறான தொழிலுக்குச் செல்ல வேண்டும், தொழில் நேரம், எவ்வாறான சம்பளம் வழங்க வேண்டும் என்ற திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை.

எனவே தொழில் வழங்குகின்ற தனியார் நிறுவனங்கள் சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திவிட்டு சிறுவர்களுக்குச் குறைவான சம்பளத்தைக் கொடுத்துவிட்டு தன் நிறுவன நலனைச் சிறப்பாகச் செய்யக் கூடிய சூழ்நிலை நிலவும்.

அமைச்சரின் இந்தக் கருத்தினை எதிர்ப்பதா? அல்லது ஆதரிப்பதா? என்பதற்கு அப்பால் எங்களுடைய பல மாணவர்கள் இன்றைய கொவிட் மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக இன்றும் கல்வியை இழந்த நிலையிலேயே இருக்கின்றார்கள். இவர்களின் கல்வி கற்கின்ற உரிமையைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது. எனவே இந்த சூழ்நிலையிலே தொழிலுக்கு மாணவர்கள் செல்ல முடியும் என்ற கருத்தானது தொடர்ச்சியாக அவர்களின் கல்வி உரிமையை இல்லாமல் செய்யும் வாய்ப்புகளை எதிர்காலத்தில் உருவாக்கி விடும்.

எனவே அமைச்சர் வெறுமனே கருத்துக்களை முன்;வைப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல். அக்கருத்திற்கான திட்டங்களாக ஒரு கட்டுப்பாட்டினை விதிப்பாராக இருந்தால், பொருளாதார ரீதயில் பின்னடைவில் இருக்கின்ற மாணவர்களுக்கு இது உதவியாக அமைந்தாலும், அந்த மாணவர்களின் கல்வியினையும், நாட்டின் கல்வித் தரத்தினையும் கவனத்திற் கொண்டும் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தொழில் புரியும் போது அவர்களுக்கு தொழில் வழங்கும் நிறுவனங்களில் உரிய பாதுகாப்பு மாணவர்களுக்கு இருக்கின்றதா? போன்றவைகளையும் தேடி அறிந்து அதற்குரிய ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
உலகளாவிய ரீதியில் எதிர்க்கும் சிறுவர் தொழிலினை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இருப்;பினம் தற்போதைய பொருhதார நிலைமை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டடிருக்கின்றன. இவ்வாறானன விடயங்களுக்குத் தீர்வாகவே பாடசாலைகளிலே தொழில்முறைக் கல்வியினைக் கொண்டு வந்திருந்தார்கள். இந்;த நிலையில் அதனை விரிவாக்கல் செய்யக் கூடிய சந்தர்ப்பம் அண்மைய நாட்களிலே உருவாகியிருக்கின்றது.

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு இந்த தொழில்முறைக் கல்வியினை வழங்குவதற்கு புதிய ஏற்பாடுகள் கடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்தத் தொழில்முறைக் கல்வியினை விரிவாக்கி மாணவர்;கள் தொடர்ச்சியாக பொருளாதார சிக்கல்ககளில் இருந்து மீண்டுகொள்வதற்கும், மாணவர்கள் தொழில் வாய்ப்பினையும் பெற்றுக் கொள்வதற்கும் சிறந்த ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் கல்வியினையும் விரிவாக்கக் கூடிய சந்தர்ப்பமும் ஏற்படும் என்று தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.