மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

ஈழமணித் திருநாட்டின் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொண்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா நேற்று (17) புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

நேற்றையதினம் காலை மட்டக்களப்பு அரசடியில் உள்ள சித்திவிக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை திருச்செந்தூர் முருகன் ஆலயத்தினை வந்தடைந்ததும் விசேட யாக பூசைகள் இடம்பெற்று, ஆலயத்தில் மூலமூர்த்திக்கு அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்று, விசேட ஆராதனைகள் மற்றும் கொடிக்கம்ப அபிசேக ஆராதனைகள் என்பன நடைபெற்றன.

கொடியேற்றத்தினை தொடர்ந்து முதல் எட்டு நாட்கள் திருவிழாவில் நாளாந்தம் சுவாமி உள்வீதி வெளிவீதியுலா என்பன இடம்பெற்று, ஒன்பதாம் நாளாகிய 25.08.2022 வியாழக்கிழமையன்று பி.ப 3.00 மணியளவில் தேர்த்திருவிழாவும் பத்தாம் நாளாகிய 26.08.2022 திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வங்கக் கடலில் சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெற்று இவ்வாண்டிற்கான மஹோற்சவ பெருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.

இலங்கைத் திருநாட்டில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயங்களில் தமிழ் மொழியில் வேத பாராயணங்கள் ஓதப்பட்டு முருகப்பெருமானிற்கு பூசை வழிபாடுகள் இடம்பெறும் ஒரேயொரு ஆலயமாக இவ்வாலயம் திகழ்வதும், இந்தியாவின் புகழ்பூத்த முருகன் ஆலயமான திருச்செந்தூர் ஆலயத்தினை நோக்கியதாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளதும் சிறப்பம்சமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.