“நிந்தவூர் ஐ.பி.எல் சீசன் 05 ” சம்பியன் பட்டத்தை இரண்டாவது தடவையாகவும் வென்றது சம்மாந்துறை விளையாட்டு கழகம்.

நூருல் ஹுதா உமர்

நிந்தவூரில் 40 வருடங்கள் கடந்த மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான இம்ரான் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றிய “இம்ரான் பிரீமியர் லீக் சீஸன் 05”  20 க்கு 20 கடினபந்து கிரிக்கட் சுற்றுத்தொடரின் சம்பியன் பட்டத்தை சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி சம்மாந்துறை விளையாட்டுக்கழகம் இரண்டாவது தடவையாகவும் தனதாக்கி கொண்டது.

நிந்தவூர் தலைவர் அஸ்ரப் ஐக்கிய பொதுவிளையாட்டு மைதானத்தில் இம்ரான் விளையாட்டுக்கழக தலைவரும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதமின் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இறுதிப்போட்டியில்  நாணய சுழற்சியில் வென்ற சம்மாந்துறை  விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயித்த 20 ஓவர்களில் 196 ஓட்டங்களை 07 விக்கட்டுக்களை இழந்து பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை விளையாட்டுக்கழக வீரர்களான இர்ஷாத் 25 பந்துகளை எதிர்கொண்டு 56 ஓட்டங்களையும், றிக்காஸ் 33 பந்துகளை எதிர்கொண்டு 45 ஓட்டங்களையும்  பெற்றுக்கொண்டனர். சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சார்பில் சிறப்பாக பந்து வீசிய றிழ்வான்  03 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதனடிப்படையில்197 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் 16.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மட்டும் பெற்று 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.  சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இஷ்ரத் 24 ஓட்டங்களையும், ஆபாக் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக 56 ஓட்டங்களை பெற்ற சம்மாந்துறை விளையாட்டுக்கழக வீரர் இர்ஷாத்  தெரிவு செய்யப்பட்டதுடன் தொடராட்டகாரராக நிந்தவூர் இம்ரான் விளையாட்டு கழக வீரர் நிக்ஸி அஹமட் தெரிவானார்.

இப்போட்டிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் அதிதிகளாக கலந்து கொண்டு வெற்றி கேடயத்தையும், பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தனர். இந்த பிரதேசத்தில் இவ்வருடம் நடந்த முடிந்த சகல சுற்று தொடர்களிலும் பலம்வாய்ந்த அணிகளை வீழ்த்தி சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தினர் தொடர்ச்சியாக 06 சம்பியன் பட்டங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.