பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தாலும் எமது மக்களின் செயற்பாடுகளை முன்னெடுக்கச் சரியான களம் அமையவில்லை… (பா.உ – த.கலையரசன்)

(சுமன்)

பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தாலும் எமது மக்களுக்கான சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய சரியான களம், சந்தர்ப்பம் அமையவில்லை. இருந்தும், கிடைக்கின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் எமது மக்களின் பிரச்சனைகளை முன்நிறுத்திச் செயற்பட்டு வருகின்றேன் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
கல்முனை சைனிங் விளையாட்டுக் கழக கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பிரதேசங்களிலே பல குறைபாடுகள் காணப்படுகின்றன. விளையாட்டினைப் பொருத்தவரையில் மைதானங்கள் இல்லாத நிலைக்கு மேலாக இருக்கின்ற மைதானங்களும் பல குறைபாடுகளோடு இருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார, அரசியல் சிக்கல் நிலைமைகளின் காரணமாக எம்மால் குறிப்பிட்டு வாக்குறுதிகளை வழங்க முடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம்.
ஏனெனில் இந்த நாட்டிலே பெரும் நோய்த்தொற்று உருவாகி மக்களுக்கு சொல்லொனாத் துயரத்தைத் தந்தது. அது மட்டுமல்லாது ராஜபக்ச குடும்பத்தின் முறையற்ற ஆட்சியினால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக நாட்டின் சகல இன மக்களும் வாழ்விழந்த நிலையில் பெரும்பான்மைச் சிங்கள மக்களாலேயே கொண்டுவரப்பட்ட கோட்டாபாய ராஜபக்ச அந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்டு ஏதோவொரு விதத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமொன்று உருவாகியிருக்கின்றது.
இன்று தற்போதைய இந்த அரசாங்கமும் நீடித்திருக்குமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருக்கும் போது எம்மால் வேலைத்திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகளை வழங்க முடியாது. இருந்தும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் எனக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் எமது பிரதேச ரீதியான திட்டங்களுக்கு சிறு சிறு தொகையினை ஒதுக்கீடு செய்திருக்கின்றேன்.
உண்மையில் எனக்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தாலும் எமது மக்களுக்கான சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய சரியான சந்தர்ப்பம், களம் அமையவில்லை. இருந்தும், கிடைக்கின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் எமது மக்களின் பிரச்சனைகளை முன்நிறுத்தி அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலே எமது பணிகளை மேற்கொண்டு வருகின்றேன் என்று தெரிவித்தார். attachments (7)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.