சத்துருக்கொண்டான் தொடக்கம் பிள்ளையாரடி வரையான ஆற்றங்கரையோரம் துப்பரவுப் பணி முன்னெடுப்பு…

(சுமன்)

 

மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரக் குழு மற்றும் இமயம் இளைஞர் கழகம் என்பவற்றின் ஏற்பாட்டில் சத்துருக்கொண்டான் தொடக்கம் பிள்ளையாரடி வரையான ஆற்றங்கரை ஓரங்களில் காணப்பட்ட உக்காத பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் செயற்திட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இமயம் இளைஞர் கழகத்தினால் மாநகரசபை உறுப்பினர், சுகாதாரக் குழுத் தலைவர் க.ரகுநாதனிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு  அமைவாக மாநகர சபை ஊழியர்கள், இமயம் கழக இளைஞர்கள்
இணைந்து இச் சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன், கௌரி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மாநகரசபை உறுப்பினரும், சுகாதாரக் குழுவின் தலைவருமாகிய க.ரகுநாதன் கருத்துத் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் உக்காத பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை அதிகரிப்பதோடு மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளின் காரணமாக சூழல் மாசடைவுகளும் ஏற்படுகின்றன. மாநகரசபையும், ஊழியர்களும் எவ்வளவு தான் துப்பரவுகளை மேற்கொண்டாலும் மக்களாகிய ஒவ்வோருவரும் இது நம்முடைய சூழல் என்பதை உணர்ந்து வீதியோரங்களில் குப்பைகளை வீசுவதைத் தவிர்த்துகொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் இச்செயற்பாட்டிற்கு உதவிய கௌரவ மாநகர முதல்வர், ஆணையாளர், ஊழியர்கள், இளைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்