பிரதேச சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்தால் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும்: பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்…..

பிரதேச சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்தால் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும்: பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்

நூருல் ஹுதா உமர்

எமது நாடும் பிரதேசமும் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, தலை விரித்தாடும் போதைவஸ்த்து, சமூக விரோத செயல்கள் போன்றவற்றுக்கு நாம் முகம் கொடுப்பதற்கு சகல சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவில் அமைப்புகளின் வருடாந்த ஒன்றுகூடல் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. அஹமட் சபீரின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் நடைபெற்றது.இதில் சாய்ந்தமருது பிரதேச செயலத்தில் பதிவு செய்யப்பட்ட 25க்கு மேற்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதேச செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,

இளைஞர்கள், மாணவர்கள்  போதைவஸ்த்துக்கு அடிமையாக்கப்பட்டு மிக மோசமாக தலைவிரித்தாடுகின்ற போதிலும் அதனை ஓரளவேணும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் முற்றாக தடை செய்வதில் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. சாய்ந்தமருதில் பாவனையில் இல்லாத சில அரச காணிகளை ஆக்கிரமிப்பு செய்வதிலும் சிலர் முட்பட்டாலும் அதனை முடிவுக்கு கொண்டுவருவதில் நீதிமன்றத்தை நாடி தீர்வினை பெற்றோம் எனவும் தெரிவித்தார்.

இன்று கூடியிருக்கும் நாம் அனைவரும் ஒருமித்து செயற்படுவோமாக இருந்தால் மேற்கூறிய பிரச்சினைகளிலிருந்து எமது பிரதேசத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். அதற்கமைவாக இன்று கூடியுள்ள அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து செயற்படுதல்  வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பு என்னால் வழங்க முடியும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

இதன்போது சமூகத்தின் எதிர்காலகருதி முதியோர் நலத்திட்டங்கள், சிறுவர் நலத்திட்டங்கள், போதைவஸ்த்து பாவனை தொடர்பான விழிப்புணர்வு, போதைவஸ்த்துக்கு அடிமைப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வளித்தல், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள், விஷேட தேவையுடைய பயனாளிகளுக்கான நலத்திட்டங்கள்,  பாடசாலை இடைவிலகள் மாணவர்களை நெறிப்படுத்தலும் அவர்களுக்கான நலத்திட்டங்கள் போன்ற செயற்பாடுகளை எதிர்காலத்தில் செயற்படுத்துவது எனவும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.