சர்வதேச நாணய நிதியத்தினருடன் இன்று இரவு முக்கிய சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பல சுற்று கலந்துரையாடல்களின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை தொழில்நுட்ப பிரதிநிதிகளுக்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று இரவு 10 மணிக்கு நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கை தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கும் என உள்ளக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரம் பெற்ற பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுவிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 3 பில்லியன் டொலர் பிணை எடுப்புக்காக இலங்கை காத்திருக்கிறது.

இந்தநிலையில் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இதுவரையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் நாளைய தினம் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளது.

அனேகமாக நாளை நண்பகல் வேளையில் அந்த அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் மற்றும் இறுதி முடிவுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதற்கான உரிமையை சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்குமாறு கோரப்பட்டுள்ளமையினால் பேச்சுவார்த்தைகளின் மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.