மைத்திரியின் பிரசார கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், பிரசார மேடை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், முல்லேரியா, வல்பொல பிரதேசத்தில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டது்டன், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

34 மற்றும் 29 வயதுடைய இவர்கள் கடுவெல மற்றும் ஹிம்புட்டானை பிரதேசத்தை சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபர்கள் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு வெல்லம்பிட்டி உமகிலிய விளையாட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரசார கூட்டத்தின்போது, மேடையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன், மேற்படி சந்தேகநபர்களுள் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக, கடந்த2020ஆம் ஆண்டு பொலிஸ் அடையாள அட்டையை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இச்சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்றையவர் 2018ஆம் ஆண்டு பேலியகொட பிரதேசத்தில் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று புதுக்கடை இலக்கம் 8 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.