அமெரிக்காவிடமிருந்து மற்றுமொரு மருத்துவ உதவி இலங்கைக்கு

அமெரிக்க மனிதாபிமான நன்கொடையாளர் அமைப்பான ஹோப் வேர்ல்ட்வைட் நன்கொடையாக வழங்கிய 2.74 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ உதவித்தொகை ஒக்டோபர் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம், புகழ்பெற்ற அமெரிக்க மனிதாபிமான நன்கொடையாளர் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு, 2022 ஜூலை முதல் அக்டோபர் வரை இலங்கைக்கு இலவச மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

மூன்று சரக்குகள் ஏற்கனவே சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், நான்காவது சரக்கு ஒக்டோபர் 02 ஆம் திகதி தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 சரக்குகளின் மொத்த மதிப்பு 12,645,150 அமெரிக்க டொ லர்களாகும். இது தோராயமாக இலங்கை ரூபாவில் 4.6 பில்லியனாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க நன்கொடை நிறுவனங்களை அணுகிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க, ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல், ஹோப் வேர்ல்ட் ஒயிட் மற்றும் அமெரிக்காரேஸ் ஆகிய மூன்று நன்கொடையாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ஜூலை 2022 இல் தொடங்கி, ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல் 9.131 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள இரண்டு சரக்குகளை அனுப்பியுள்ளது. அமெரிக்கர்ஸில் இருந்து வந்த சரக்கு செப்டம்பர் மாதம் முன்னதாக கொழும்பை வந்தடைந்தது மற்றும் அதன் பெறுமதி 773,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

ஏற்றுமதிகளை பொறுப்பேற்கும் சுகாதார அமைச்சு இந்த மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான பெறுநர்கள் மற்றும் உள்ளூர் இடங்களைக் குறிப்பிடும் விரிவான விநியோக அறிக்கைகளை நன்கொடையாளர்களுக்கு வழங்கும் என தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.