மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள் – யாழ் மக்களுக்கு எச்சரிக்கை தகவல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கத்தினால் இந்த ஆண்டு 2548 நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன், 8 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

எதிர்வரும் மாதம் பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகவுள்ள நிலையில், டெங்கு நோயின் தாக்கம் குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்ட விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு அபாயம்

மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள் - யாழ் மக்களுக்கு எச்சரிக்கை தகவல் | Dengue Jaffna Symptoms Treatment

 

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த சில மாதங்களாக யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், அதிக மரணங்களும் பதிவாகின்றன.

கொவிட்-19 தொற்று காரணமாக மாகாணங்களிற்கிடையே ஏற்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து காரணமாக கடந்த இரண்டு வருடங்களிலும் டெங்கு நோயாளர்கள் மற்றும் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகும்.

 

 

கடந்த ஐந்து வருடங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மரணங்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டது.

இவ் வருடம் நடந்த மரணங்களில் பெரும்பாலானவை நோயாளர்கள் தாமதமாக வைத்திய ஆலோசனையினை நாடியதாலேயே நிகழ்ந்துள்ளன.

எனவே காய்ச்சல் போன்ற டெங்கு நோய்க்கான அறிகுறிகளுடையவர்கள் உடனடியாக தகுதி வாய்ந்த மருத்துவர் ஒருவரையோ அல்லது வைத்தியசாலைகளினையோ நாடி உரிய வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பாக செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி அரச அதிபர் தலைமையில் யாழ். மாவட்ட டெங்கு தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

அவ்வாறே எதிர்வரும் வாரத்தில் பிரதேச மட்ட டெங்கு தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டங்கள், பிரதேச செயலர் பிரிவு வாரியாகவும் கிராமிய மட்டங்களில் கிராம சுகாதார மேம்பாட்டு குழு கூட்டங்களும் இடம்பெறும்.

நாடு முழுவதும் விசேட நிகழ்ச்சித் திட்டம்

மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள் - யாழ் மக்களுக்கு எச்சரிக்கை தகவல் | Dengue Jaffna Symptoms Treatment

இனி வரும் மாதங்களில் யாழ் மாவட்டம் பருவப்பெயர்ச்சி மழையினை அதிகம் பெறும் காலமாகும். எனவே இம்மாதங்களில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

பருவப்பெயர்ச்சி மழையுடன் ஏற்படக்கூடிய டெங்கு பெருந்தொற்றினைத் தடுப்பதற்கு வாராந்தம் உறுதி செய்யப்படும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்.

 

 

எனவே நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகக் கருத்தில் கொண்டு எதுவித காலதாமதமும் இன்றி சமூக பங்களிப்புடன் நுளம்புகள் உருவாகும் மூலங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

இதனைக் கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சானது நாடு முழுவதும் அதிக ஆபத்துள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுக்கின்றது. இது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

முதலாவது டெங்கு கட்டுப்பட்டு நிகழ்ச்சித் திட்டம் ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை சங்கானை, கரவெட்டி, ஊர்காவற்துறை, நல்லூர், சண்டிலிப்பாய், மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட உள்ளது.

அவ்வாறே எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை சாவகச்சேரி, கோப்பாய், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.