தடைகளைத் தகர்த்து வெற்றியுடன் நடந்தேறிய கையெழுத்துப் போராட்டத்தின் இறுதி நிகழ்வு

இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழியாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு மூவின சமூகத்தினரின் பேராதரவுடன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அம்பாந்தோட்டையின் தங்காலையில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இரா.சாணக்கியன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், மூவின மக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரையான போராட்டத்தை காங்கேசன்துறை – மாவட்டபுரத்தில் ஆரம்பித்து வைத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம், தொழிற்சங்கப் பிரமுகர் ஜோசப் ஸ்டாலின் போன்றோரும் இன்று தங்காலையில் நடைபெற்ற இறுதி நிகழ்விலும் பங்கேற்றனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட கையெழுத்து சேகரிக்கும் ஊர்தி இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மக்களின் கையெழுத்துக்களைச் சேகரித்த பின்னர் இன்று அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலையில் தனது செயற்பாட்டைத் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.

 

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.