டுபாயில் கைக்குழந்தையை விற்க முயன்ற இலங்கை பெண்ணுக்கு சிறை

துபாயில் 12,000 திர்ஹம்களுக்கு (சுமார் 12 இலட்சம் ரூபா) சமூக ஊடகங்கள் ஊடாக குழந்தையொன்றை விற்பனைசெய்ய முயன்ற இலங்கைப் பெண் ஒருவர் உட்பட மூவருக்கு டுபாய் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
35 வயதுடைய இந்தோனேசியப் பெண் ஒருவர் தனக்கு புதிதாகப் பிறந்த குழந்தையை பணத்திற்காக விற்க முயன்றுள்ளார் என்றும் குழந்தையை விற்பதற்கான நபரை தேடிக் கண்டுபிடிக்க உதவிய 45 வயதுடைய இலங்கைப் பெண் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதக் குழந்தையை விற்பனை செய்வதாக கடந்த பெப்ரவரியில் இணையத்தில் வெளியான விளம்பரத்தின் அடிப்படையில் டுபாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்த விளம்பரம் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரால் வெளியிடப்பட்டதாக விசாரணைகளின் மூலம் மேலும் தெரியவந்தது. அதன்படி, டுபாய் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மூன்று சந்தேக நபர்களும் ஆட்கடத்தல் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டதுடன், டுபாய் நீதிமன்றம் ஒரு சந்தேக நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 4000 திர்ஹாம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன், அவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தமைக்காக அவர்களுக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும் 1,000 திர்ஹாம் அபராதமும் விதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்