சிறிலங்கா காவல்துறைக்கு அடுத்த தலையிடி..! விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு
கொழும்பு காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை சிறிலங்கா காவல்துறையினர் கலைத்த விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டதற்கான காரணங்களை விவரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காவல்துறை மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நேற்றைய தினம் காலிமுகத்திடலில் ஒன்றுகூடியவர்களை கலைப்பதற்கு சிறிலங்கா காவல்துறையினர் நடவடிக்கை எடுத்த போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதேவேளை, காலிமுகத்திடலில் ஒன்றுகூடியமை சட்டவிரோதமானது கூறி, போராட்டத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் ஆறு பேரை கைதுசெய்திருந்தனர்.
தமது குழந்தைகளுடன் காலி முகத்திடலில் ஒன்று கூடியவர்களை கைதுசெய்வதற்கு கட்டுக்கடங்காத முறையில் காவல்துறையினர் முயற்சித்த சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
இந்த சம்பவங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஸ்ரீலங்கா காவல்துறை மா அதிபரை கோரியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது
கருத்துக்களேதுமில்லை