சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தால் உலக நாடுகள் உதவும்: மைத்திரி

சர்வகட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்குமானால், உலக நாடுகள் இலங்கைக்கு உதவும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக ரீதியாக கொண்டு செல்வதே தற்போது தேவையாக உள்ளது.

பசி, உணவின்மை, விவசாய பிரச்சினை, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. பல வைத்தியர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். சுகாதாரதுறை பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது. பணம் இன்மையால், மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இவ்வாறான பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில், நாடு என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் எம்மிடையே பேதங்கள் காணப்படுவது பொருத்தமற்றது.

எனினும் மக்களின் பக்கம் நின்று அவர்களின் குரல்களுக்கு செவிமடுத்து செயல்படுவது அவசியமாகும்.

சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்குமாயின் பல நாடுகளின் உதவி எமக்கு கிடைத்திருக்கும். இதன் ஊடாக நாட்டை தற்போதைய நிலையில் இருந்து மீட்டிருக்க முடியும். எனினும், சர்வகட்சி அரசாங்கத்திற்கு தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலரும் ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர்.

இந்த நிலையில் நாட்டை கட்டி எழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கும் மக்களின் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.