மாணவியிடம் பாலியல் சேஷ்டை ! அதிபர் கைது : மட்டக்களப்பில் சம்பவம்!

19 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (10) திங்கட்கிழமை   கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு  தலைமையக பொலிஸார் தெரிவித்தனர் கா.பொ.த.உயர் தரத்தில் கற்றுவரும் மாணவியொருவர் மீதே பாடசாலை அதிபர் இவ்வாறு சேஷ்டை புரிய முற்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி விடுதியில் இருந்த மாணவியை தனது காரியாலயத்துக்கு  வரவழைத்து அந்த மாணவி மீது பாலியல் சேஷ்டையை விட முயற்சித்துள்ளதையடுத்து அங்கிருந்து மாணவி தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த 4 பேர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 4 ம் திகதி பாடசாலைக்குள் சென்று தங்களை சி.ஐ.டி எனக்கூறி, அதிபரை தாக்கியதுடன்  வீடியோவையும் எடுத்துள்ளனர். இந்த அதிபர் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியதையடுத்து இதனை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவி, நேற்று (10) திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மட்டு பொலிஸ் நிலையத்தில், அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன்  அதிபரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சிஐடி என கூறிக்கொண்டு வந்த நால்வர், தன்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களை தனக்குத் தெரியாது என பொலிஸாரிடம் தெரிவித்துள்ள அதிபர்,    வெளியாகிய வீடியோவை ஆதாரமாக வழங்கி    பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.