புதுடெல்லியில் ஈழத் தமிழர் மாநாடு – இலங்கை அரசுக்கு கடுமையான செய்தி

35 வருடங்களுக்குப் பின்னர் புதுடெல்லியில் ஈழத்தமிழர் விவகாரம் பற்றி 10 ஒக்டோபர் 2022 அன்று இந்திய அரசுசார் முக்கியஸ்தர்களுடனான ஈழத்தமிழர் சந்திப்பும், நட்புறவு பேச்சுக்களும் முதற்கடவையாக இடம்பெற்றிருக்கிறது.

இது இன்றைய நாளில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. 1987 ஒக்டோபர் 10 இந்திய – இலங்கை ஒப்பந்தம் முறிவும், இந்திய அமைதிப் படையுடன் விடுதலைப் புலிகள் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட 35 ஆவது ஆண்டு நிறைவு நாளில் இருதரப்பும் கைகுலுக்கி புதிய நட்புறவு ஒன்றை வளர்க்க முற்பட்டுள்ளனர்.

ஈழத் தமிழர்களின் அரசியல் மைல்கல்

புதுடெல்லியில் ஈழத் தமிழர் மாநாடு - இலங்கை அரசுக்கு கடுமையான செய்தி | Eelam Tamil Mahanadu Held In New Delhi

இந்த நிகழ்வு சரி பிழைகளுக்கு அப்பால் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் மீண்டும் ஒருமுறை ஈழத் தமிழர் சார்ந்த விவகாரத்தில் டெல்லியை மையப்படுத்திய ஈழத் தமிழர்களின் அரசியல் வழி அல்லது கதவு திறக்கப்பட்டிருப்பது ஒரு மைல்கல்தான்.

உலகளாவிய ரீதியில் 33 நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்பட தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 1991 ஆம் ஆண்டில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு இந்திய மண்ணில் எந்த செயற்பாட்டையும் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஈழத் தமிழர்களின் அண்டை நாடான இந்தியாவின் இத்தடையானது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிகவும் பாரதூரமான பின்னடைவாகும். தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தின் பேரழிவிக்கான காரணங்களில் இத்தடையும் ஒன்றாக அமைந்துவிட்டது.

விடுதலைப் புலிகள் மீதான தடை

புதுடெல்லியில் ஈழத் தமிழர் மாநாடு - இலங்கை அரசுக்கு கடுமையான செய்தி | Eelam Tamil Mahanadu Held In New Delhi

 

இந்தத் தடையானது விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் “”ஒரு செயல் அது தரவல்ல விளைவுகளின் அளவிலிருந்து தான் அச்செயல் பற்றி எடை போடப்பட வேண்டும்”” என்பதைக் கருத்தில் கொண்டு நோக்கினால் விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடையானது உண்மையில் ஈழத் தமிழர் யாவரும் அந்தத் தடையின் கட்டுக்குள் அடங்கி அடக்கப்பட்டதாகவே நடைமுறையில் செயற்பட்டதைக் காணலாம்.

ஈழத்தமிழர், தமிழீழம். விடுதலைப் புலிகள், என்ற சொல்லாடல்களை பயன்படுத்தி இந்திய மண்ணில் மாநாடுகளையோ, கூட்டங்களையோ அல்லது பேச்சுக்களையோ சட்டபூர்வமாக நடத்த முடியாத ஒரு இறுக்கமான சூழல் உருவாக்கப்பட்டிருந்தது. இங்கே பேச்சுக்கள் என்கின்றபோது பல்வேறுபட்ட தனிநபர்கள் பின்கதவாலும், மறைமுகமாகவும் இந்தியப் பிரதிநிதிகளுடன் பேசி இருக்கக் கூடும். ஆனால் பகிரங்கமாக ஒரு பொது மேடையில் பேசுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இருந்ததும் கிடையாது என்பதுதான் உண்மை.

இந்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோச் பெர்னாண்டஸ் ஒரு முறை 13 நவம்பர் 2000 அன்று புதுடில்லியில் ஈழத்தமிழர் சார்ந்த ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்டி இருந்தார். அந்தக் கூட்டம் அன்றைய நாளில் இந்திய காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு மண்டபத்தில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டது. இப்படி அமைச்சராக இருந்த ஒருவரால் கூட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட போது தனது வீட்டுக்குள்ளேயே ஒரு கூட்டத்தை நடத்த வேண்டிய நெருக்கடிக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோச் பெர்னாண்டஸ் தள்ளப்பட்டார் என்பதிலிருந்து இந்தத் தடை எவ்வளவு இறுக்கமாகவும் வலிமையாகவும் இருந்தது என்பதனை புரிந்துகொள்ள முடியும்.

அவ்வாறே இந்த வருடம் 21 மே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டம் ஒன்று தமிழகத்தில் நடாத்தப்பட்ட போது அக்கூட்டம் நடத்துவதற்குதடை விதிக்கப்பட்டது மாத்திரமல்ல, கூட்டம் நடத்திய தமிழக அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். ஆனால் ஈழத் தமிழர்கள் யாரும் அங்கு கைது செய்யப்படவில்லை என்றாலும்கூட, கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த வருடம் கறுப்பு ஜூலையை முன்னிட்டு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உட்பட்டோர் டெல்லியில் ஈழத் தமிழர்களின் கறுப்பு நாளை நினைவு கூர்வதற்கு கருத்தரங்கு ஒன்றை 30-07-2022 அன்று நடத்த முற்பட்ட போது அந்த இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு இந்திய காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு நிகழ்வு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது என்பதனை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர் மாநாடு

 

இத்தகைய பின்னணியில் இலங்கை அரசாங்கம் இந்திய மண்ணில் ஈழத் தமிழர்கள் சார்ந்த கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்த முடியாது என்ற நம்பிக்கையில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இருந்த நிலையில் இம்மாதம் ஒக்டோபர் 10ஆம் திகதி புதுடெல்லியில் ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினை சார்ந்து ஒரு பொதுக் கூட்டத்தை ஈழத் தமிழர்கள் பல்வேறுபட்ட சாத்தியமான வழிகளை மிக நுணுக்கமாக கையாண்டு இன்றைய உலகளாவிய அரசியல் போக்கு மாற்றத்தினை கவனித்து அதற்கு ஏற்ற வகையில் இந்திய அரசின் அனுமதி பெற்று இந்த ஈழத்தமிழர் மாநாட்டினை டெல்லியில் நடத்தி முடித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் புலம்பெயர் தமிழர்களையும் தாயகத் தமிழர்களையும் கலந்து கொள்ளும்படி மகாநாட்டு குழுவினரால் பகிரங்க அழைப்பும் விடப்பட்டது. உண்மையான இலட்சியப் பற்றுள்ள தமிழர் நலன் சார்ந்த நபர்களும் அமைப்புகளும் இந்த மகாநாட்டு அழைப்பின் பிரகாரம் டெல்லியில் ஒரு மண்டபத்தில் ஒன்றுகூடி எந்த தடைகளும் இன்றி நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் இந்திய அரசு சார்ந்த பிரமுகர்களும் இந்திய அரசியலை நிர்ணயம் செய்கின்ற பல்வேறுப்பட்ட அமுக்க குழுக்களின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

அந்த நிகழ்வில் முன்னாள் போராளிகள் பலரும் கலந்து கொண்டு இந்திய முக்கிய பிரமுகர்களுடன் தமது நிலைப்பாடுகள் பற்றியும் எதிர்கால இந்து சமுத்திரம் பாதுகாப்பு பற்றியும் பேசினர் என்பதும் இங்கே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகும்.

இவ்வாறு ஈழத் தமிழர்கள் புதுடில்லியில் ஒரு மாநாட்டை இந்திய காவல்துறையின் அனுமதியுடன் நடத்தியதன் மூலம் இதுவரை காலமும் சட்ட ரீதியாக இருந்து வந்த தடை என்கின்ற முறைமை இப்போது நடைமுறை ரீதியாக தளர்த்தப்பட்டிருக்கிறது.

ஒரு நீதிமன்ற தீர்ப்பும், நடைமுறையும் சட்டத்துக்கு சமனானது. இப்போது இந்த மாநாடு நடைமுறை முன்னுதாரணமாகிவிட்டது. எனவே இந்த முன்னுதாரணத்தை பின்பற்றி இனிவரும் காலத்தில் ஈழத் தமிழர் தரப்பில் யாராக இருந்தாலும் புதுடெல்லியில் மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத்த முடியும் என்பது மகிழ்ச்சியான விடயம்தான்.

ஆகவே இனி வரும் காலங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் இத்தகைய கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்துவதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

இலங்கை அரசுக்கு கடுமையான செய்தி

புதுடெல்லியில் ஈழத் தமிழர் மாநாடு - இலங்கை அரசுக்கு கடுமையான செய்தி | Eelam Tamil Mahanadu Held In New Delhi

 

அதேவேளை, இலங்கை அரசுக்கு ஒரு கடுமையான செய்தியும் சொல்லப்பட்டுவிட்டது. இலங்கையை மீறி இந்தியா ஈழத் தமிழர் விவகாரங்களில் தலையிடுவதற்கு தயாராகிவிட்டது என்பதும் இந்திய அரசின் வெளிவிவகார விடயங்களில் மாற்றங்கள் ஏற்படப் போகின்றது என்பதுதான் அந்தச் செய்தி.

அத்தோடு இலங்கைக்கு எதிராக இந்திய மண்ணில் இருந்து ஜனநாயக ரீதியில் செயற்படுவதற்கான வழி ஒன்று திறந்து விடப்பட்டுவிட்டது என்பதும் கவனத்திற்குரியது.

இத்தகையதொரு வாய்ப்பான மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் கருத்திற் கொண்டு மேலும் பல்வேறு முன்னெடுப்புக்களை ஈழத்தமிழர் சார்ந்த பல்வேறு அமைப்புக்களும் சக்திகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இது ஓர் அடைபட்ட கதவு அனைவர்க்கும் திறபட்ட மாதிரியானது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.