QR முறைக்கு மேலதிகமாக எரிபொருள் வழங்க நடவடிக்கை
கம்பஹா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாமல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கம்பஹா மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி வெள்ளம் குறைந்தவுடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை சுத்தப்படுத்துவதற்கான அவசர வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்த வேண்டும் என்றும், அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை அரசுடன் ஆலோசிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் பெய்து வரும் கடும் மழையினால் கம்பஹா மாவட்டத்தில் 11,158 குடும்பங்களைச் சேர்ந்த 46,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் அஜித் நிஷாந்த தெரிவித்தார்.
தற்போது கம்பஹா மாவட்டத்தில் வெள்ளம் குறைந்துள்ளது. இதனால், பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற மக்களும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மேலும் இந்த சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வீடுகள் முழுமையாகவும் மேலும் இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன் சமைத்த உணவு வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் உலர் உணவும் வழங்கப்படும்.
சீரற்ற காலநிலை காரணமாக பரவும் நோய்களை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார். அவ்வாறான அவசரநிலை தொடர்பில் 033-2234904 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை வெள்ள நிலைமை தணிந்ததன் பின்னர் பரவிவரும் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு QR முறையில் எரிபொருள் கிடைப்பது தடையாக உள்ளதாக உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
அங்கு, தேவைக்கு ஏற்ப QR முறைக்கு மேலதிகமாக எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கம்பஹா மாவட்ட ஆணையாளர் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தோடு கம்பஹா மாவட்ட உள்ளூராட்சித் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் மாவட்ட ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை