மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு: நீதிமன்றத்தின் உத்தரவு

மன்னார் சதொச மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று(17) உத்தரவிட்டுள்ளது.

மன்னார் நீதவான் ஏ.எஸ்.ஹிபதுல்லாஹ் முன்னிலையில் வழக்கு இன்று(17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் அழைப்பாணைக்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ இன்று(17) மன்றில் ஆஜராகியிருந்தார்.

வழக்கு தொடர்பான அறிக்கைகளை கடந்த மே மாதம் 18ஆம் திகதி தாம் அனுப்பியிருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு இன்று(17) அறிவித்துள்ளார்.

அதற்கமைய, புதைகுழி அகழ்விற்கு தேவையான நிதி, உதவி தேவைப்படும் திணைக்களங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கு அமைய, சதொச மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை எப்போது ஆரம்பிப்பது என்பதை மன்றுக்கு அறிவிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் இன்று(17) உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மனித புதைகுழி அகழ்விற்கான திகதியை மன்றுக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.