வெடிப்புச் சம்பவங்களால் அதிரும் உக்ரைன்! ரஷ்யா தீவிர தாக்குதல்
உக்ரைனின் மையப் பகுதிகளை இலக்குவைத்து ஈரானில் தயாரிக்கப்பட்ட தற்கொலை ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள், ரஷ்யாவின் விரக்தியை காண்பிக்கின்றது என உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கியின் ஊழியர்களின் பிரதானி சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனின் தலைநகர் கியேவ் உள்ளிட்ட பல நகரங்களை இலக்குவைத்து ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களில் 19 பேர் பலியாகியிருந்த நிலையில், ஆளில்லா விமானத் தாக்குதல்களை ரஷ்யா இன்று மேற்கொண்டுள்ளது.
ஏவுகணை தாக்குதல்
பல்கலைகழகங்கள், மதுபான கூடங்கள் மற்றும் உணவகங்கள் என மக்கள் புழக்கம் அதிகளவில் காணப்படும் ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்திலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் வசிக்கும் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக கியேவ் நகர மேயர் கூறியுள்ளார்.
மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள காயம் அல்லது உயிரிழப்பு தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆளில்லா விமானத் தாக்குதல்கள்
உக்ரைனின் துறைமுக நகரான மைக்கொலேவ்வின் பல இடங்களில் இன்று காலை முதல் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சூரியகாந்தி எண்ணெய் குதங்கள் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமது நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள நகர் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ள பின்னணியில் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை