சிறிலங்காவின் புனர்வாழ்வுச் சட்டமூலத்தை மீளெடுக்க கோரிக்கை – இராணுவத்திடம் மக்கள் சிக்கலாம் என அச்சம்
புனர்வாழ்வு பணியகத்திற்கான சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று அறிவித்துள்ளது.
குறித்த சட்டமூலத்தினூடாக இராணுவத்தினரால் செயற்படுத்தப்படும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைத்துக்கொள்வதற்கான அதிகாரத்தை வழங்குவதனூடாக கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படக்கூடிய பாரிய அபாயம் காணப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இராணுவத்திடம் சிக்கலாம் என அச்சம்
நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம், புனர்வாழ்வு பணியகங்களில் இராணுவத்தினரை பணியாளர்களாக கொண்ட பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்படும் புதிய நிர்வாகக் கட்டமைப்பை நிறுவும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புனர்வாழ்வு மையங்களில் போதைக்கு அடிமையானவர்கள், முன்னாள் போராளிகள், வன்முறை, தீவிரவாதக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் வேறு ஏதேனும் குழுவைச் சேர்ந்தவர்கள் வலுக் கட்டாயமாக காவலில் வைக்க அனுமதிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கண்காணிப்பகம், புனர்வாழ்வுக்காக அனுப்பப்படுவதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை என்றும், எந்தவொரு குற்றத்திலும் தண்டனை பெறாதவர்களை வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு செய்வதற்கான தன்னிச்சையான அதிகாரங்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
உத்தேச புனர்வாழ்வு பணியக சட்டம்
உத்தேச புனர்வாழ்வு பணியக சட்ட மூலமானது, குற்றஞ்சாட்டப்படாத ஒருவரை தடுப்புக்காவலில் வைப்பதன் புதிய வடிவம் என்றும் சித்திரவதை, தவறான சிகிச்சை மற்றும் முடிவில்லாத காவலில் வைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டினார்.
புனர்வாழ்வு சட்டமூலம் என்பது, இலங்கையில் தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளை அங்கீகரிக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு நெருக்கமானது எனவும் சிறுபான்மை சமூகங்கள் அல்லது அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை குறிவைக்க இந்தச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை