வீடியோவைக்காட்டி தொழிலதிபரை மிரட்டிய பெண் கைது

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்ட பெண் ஒருவரையும் அவருக்கு உதவிய மற்றொருவரையும் கைது செய்துள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது..
பேருவளை பகுதியைச் சேர்ந்த குறித்த தொழிலதிபர் செய்த முறைப்பாட்டையதையடுத்தே களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது:

குறித்த தொழிலதிபர் வணிக நோக்கத்திற்காக இந்தியா சென்றிருந்தபோது மேற்படி பெண் அவரை சந்தித்து நட்பு கொண்டுள்ளார். பின்னர் இருவரும் இந்தியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவைக் கழித்துள்ளனர் , அவர்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோவை அந்த பெண் கைபேசியில் இரகசியமாக பதிவு செய்துள்ளார்.
இருவரும் இந்த நாட்டிற்கு வந்த பிறகு அந்த பெண் தொழிலதிபரை தொடர்பு கொண்டு குறித்த வீடியோவை காட்டியுள்ளார். 70 இலட்சம் ரூபாய் பணம் தரவில்லை என்றால் வீடியோவை தொழிலதிபரின் மனைவிக்கு அனுப்புவதாக மிரட்டியுள்ளார்.

பயந்து போன தொழிலதிபர், சந்தேக நபரின் கணக்கில் பத்து இலட்சம் ரூபாய் வரவு வைத்துள்ளார். எனினும் குறித்த பெண் சில நாட்களுக்குப் பிறகு மிகுதி 60 இலட்சத்தைக் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதையடுத்து தொழிலதிபர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். பொலிசாரின் அறிவுறுத்தலுக்கமைய பணத்தை பெற்றுக் கொள்வதற்காக களுத்துறைக்கு வருமாறு தொழிலதிபர் குறித்த பெண்ணை அழைத்துள்ளார். களுத்துறைக்கு வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான குறித்த பெண்ணின் வயது முப்பத்திரண்டு எனவும், முறைப்பாட்டாளரின் வயது 52 எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பரிசோதகர் சனத் குமாரவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.