யுப்புன் அபேகோனுக்கு சிறந்த வரவேற்பு !

 

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றெடுத்து இலங்கைக்கு பெயரும் புகழும் ஈட்டிக்கொடுத்த யுப்புன் அபேகோன் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்த போது அவருக்கு குளிர்ச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொதுநலாவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.14 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இதன் மூலம் பொதுநலவாய விளையாட்டு விழாவின் 92 வருட வரலாற்றில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்றுகொடுத்த பெருமையை யுப்புன் அபேகோன் தனதாக்கிக்கொண்டார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இன்னும் இரண்டு வருடங்களில் பிரான்ஸ் தேசத்தின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பதக்கம் வென்று இலங்கையின் புகழை அகில உலகமும் பரப்பச் செய்ய யுப்புன் உறுதிபூண்டுள்ளார்.

இத்தாலியில் தொழில்புரியும் பெற்றோருடன் வாழ்ந்து வரும் யுப்புன் அபேகோன் அங்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்கிறார்.

சுவிட்ஸர்லாந்தில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற ரெசிஸ்ப்ரின்ட் சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 9.96 செக்கன்களில் நிறைவு செய்து ஆசியாவின் தற்போதைய அதிவேக மனிதன் என்ற பட்டத்தை சூடிக்கொண்டார்.

அதன் மூலம் தேசிய மற்றும் தெற்காசிய சாதனைகளை நிலைநாட்டிய யுப்புன் அபேகோன், பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்று சுமார் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் இன்று நாடு திரும்பினார்.

அவரது தயார் சில தினங்களுக்கு முன்னர் விடுமுறையில் இலங்கை வருகைதந்தார். தந்தையார் தொடர்ந்தும் இத்தாலியில் தொழில் புரிந்து வருகிறார்.

தனது பாட்டியாரின் அரவணைப்பில் சிறு பராயம் முதல் வாழ்ந்து வந்த யுப்புன் அபேகோன், தேசிய ஒலிம்பிக் குழுவின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் இத்தாலியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

யுப்புன் அபேகோனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவரது தாயார், பாட்டி உட்பட உறவினர்கள், ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர் நிறுவனம்) தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ, உதவித் தலைவர் சந்தன ஏக்கநாயக்க, விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் திலக் அப்பொன்சு, அபிவிருத்தித்துறை அதிகாரி காமினி கப்பிலதேவ கொஸ்தா ஆகியோர் வரவேற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்