திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைது..!
மட்டக்களப்பு கல்லடி ஆரையம்பதி போன்ற பிரதேசங்களில் பாரிய திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் திருடிய உந்துருளி, சமையல் எரிவாயு, தங்க நகை என்பனவும் மீட்க்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுணதீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் காத்தான்குடி காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.
வீடுகள் உடைக்கப்பட்டு திருட்டு
மட்டக்களப்பு கல்லடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் வீடுகள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல் நிலைய பொறுப்பு அதிகாரி துமிந்த நயன சிறியின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம. ரஹீம் தலைமையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு உந்துருளிகள் ஒரு தங்க சங்கிலி ஒரு துவிச்சக்கர வண்டி மீட்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவங்களுடன் மற்றுமொரு சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாகவும் காத்தான்குடி காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் திருடப்பட்ட பொருட்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை