யாழுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படாமைக்கு இந்திய நிறுவனங்களே காரணம்!

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் யாழ் சர்வதேச விமான நிலையத்தின் மேலதிக அபிவிருத்தி நிறுத்தப்படுமா? இல்லை தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா? என பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திர சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

யாழ் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி, செய்யப்பட்டது. தற்போது அதனை விஸ்தரிக்கும் வேலைத்திட்டம் சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோல, இரத்மலானை விமான நிலையமும் மேம்படுத்தப்பட்டு சர்வதேச விமான பயணங்கள் அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. நாட்டின் நெருக்கடி நிலைமை காரணமாக பல அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

யாழ் விமான நிலையம், சர்வதேச விமான நிலையம் என்ற வகையில் நாட்டுக்கு மிகவும் முக்கியமான விமான நிலையமாகும் எனவே, நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அதன் அபிவிருத்தி நிறுத்தப்படுமா? அல்லது தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா? என இதன்போது அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, யாழ் விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டதன் பின்னர் சில இந்திய விமான நிறுவனங்கள், யாழுக்கான சேவைகளை முன்னெடுப்பதாக அறிவித்திருந்தன.

எனினும், வான் போக்குவரத்து சார்ந்த தொழில்நுட்ப சிக்கல்கள் காரணம் காட்டி குறித்த நிறுவனங்கள் தொடர்ந்தும் அதனை பிற்போட்டுவருகின்றன.

இந்த மாத இறுதிக்குள் சில விமானங்கள் யாழ் விமான நிலையத்துக்கு சேவையை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளது. நாட்டின் நிலைமைகருதி, இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த விமான நிலையத்தின் மேலதிக அபிவிருத்திக்காக இந்தியா அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. தற்போது சிறிய விமானங்களை மாத்திரமே அங்கு தரையிறக்க முடியும்.

அந்த நிதியில், பெரிய விமானங்களை தரையிறக்கக்கூடிய வகையில் ஓடு பாதைகளை விஸ்தரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் இடம்பெறுகிறது என்றார்.

இதேவேளை, பாரிய நிதிச்செலவில் இரத்மலானை விமான நிலையமும் அபிவிருத்திசெய்யப்பட்டது. அது தொடர்பில் சிக்கல்களும் உள்ளன. எனினும், ஆரம்பத்தில் மாலைத்தீவு விமான சேவை, இரத்மலானைக்கு சேவைகளை முன்னெடுக்க விருப்பம் தெரிவித்தது. எனினும், பின்னர் நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டு சற்று பின்வாங்கியது.

எனினும், அந்த சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கலந்துரையாடிவருகிறது. தற்போது, அவ்விமான நிலையம், விமான பயிற்சி நிலையமாக உள்ளது.

அத்துடன் இதனை தனியார் ஜெட் விமானங்களுக்கான பிரத்தியேக தரிப்பிடமாகவும் மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.