நெல் கொள்வனவு செய்வதற்கு நிதியின்மை பிரச்சினையாக மாறியுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு
நெல் கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இதற்காக கடந்த ஜூன் மாதம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, சிறுபோகத்திலிருந்து அரிசி கொள்வனவு செய்வதற்கு இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை கடனுதவியாக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க அங்கீகாரம் பெறப்பட்டது.
அதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபை, 810 மில்லியன் ரூபா செலவில் ஏழாயிரத்து 22 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்துள்ளது. ஆனால் உரிய அரச வங்கியிலிருந்து இதுவரை இந்த தொகை வழங்கப்படவில்லை. நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நெல் கொள்வனவு செய்யப்பட்ட 810 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக, எதிர்காலத்தில் நெல் கொள்வனவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டளவில் நாட்டின் செத்தல் மிளகாய்த் தேவையை 100 சதவீதமாக பூர்த்தி செய்வது இலக்காகும் என விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார தெரிவித்துள்ளார். நாட்டில் வருடாந்தம் ஐம்பதாயிரம் மெற்றிக் தொன் மிளகாய் தேவை காணப்படுகிறது. தற்போது, ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் மெற்றிக் தொன் வரை உள்நாட்டில் மிளகாய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆரம்பகட்டமாக அடுத்த வருடம் 25 சதவீதமான உற்பத்தி இலக்கை அடைவது எதிர்பார்ப்பாகும். தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் இதனைத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை