ஐ.நா தீர்மானம் தொடர்பில் சிறிலங்கா அதிருப்தி – வெளிநாட்டு தலையீடுகளுக்கும் எதிர்ப்பு!…
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக பொறிமுறை ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கும் வகையில், உள்ளக பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தீர்மான நிராகரிப்பு
இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாம் நிராகரிக்கின்றோம்.
இலங்கையின் பலத்த எதிர்ப்பையும் மீறி அண்மையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத நாடுகளுக்கு நாம் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
வெளிநாட்டு தலையீடு
மனித உரிமைகள் பேரவையின் இந்த நடவடிக்கை அரசியல் பின்புலத்தை கொண்டது. 2012 ஆம் ஆண்டு தொடங்கி இது வரை இலங்கை தொடர்பான 8 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இது இலங்கையில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த ஜனநாயக முறைமையை பாதிக்கச்செய்துள்ளது.
உள்நாட்டு பிரச்சினைகளில் வெளிநாடுகள் தலையிடுவதை நாம் எதிர்க்கிறோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையின் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது” என்றார்.
கருத்துக்களேதுமில்லை