கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது : ஜனாதிபதி தெரிவிப்பு!..

  • கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை  நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

 

  • நேரடிவரி வருமானம் 20% விட அதிகமாக இருக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டதால் புதிய வரிகொள்கை அமுல்படுத்தப்பட்டது.

 

  • வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் இலக்கை அடைய முடியாதென்பதோடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளையும் இழக்க நேரிடும்.

 

  • வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை  பலப்படுத்த முடியாது:நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

 

  • இதைவிட மிகக் கடினமான காலத்தை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்:இந்தக் கடன்களைப் பெற்று கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

 

  • 2019 நவம்பரில் வரிகள் குறைக்கப்பட்டு ஒப்பந்தத்திற்கு முரணாக செயற்பட்டமையால் சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்க மறுத்தது : அவ்வாண்டு 700 மில்லியன் ரூபா வருமானம் இழக்கப்பட்டது.

 

  • நாம் தற்போது கடினமான கால கட்டத்திலேயே இருக்கிறோம். இதுபோன்ற  கடினமான காலத்தில் நாம் கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும்.

 

  • கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை  நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

 

  • நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும்  வரியில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம். 

கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து  சரியான பொருளாதார முகாமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை  பலப்படுத்த முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னெடுப்பு கடந்த வாரம் நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த (அக்டோபர் 07) கூட்டத்தில், எமது நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவொன்று பங்குபற்றியது. அதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் கடன் வழங்கிய சில தனியார் நிறுவனங்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றது.

75 க்கும் மேற்பட்டோர்  இந்தக் கூட்டத்தில் நேரடியாகவும், சூம் தொழில்நுட்பம் மூலமாகவும் கலந்து கொண்டனர். இலங்கைக்கு கடன் வழங்கிய ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 03 பிரதான நாடுகளுடன், பொதுவான ஒரு இடத்தில் கூடி, சலுகை  வழங்குவதற்கு எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இச்சந்திப்பில், பொதுவான மேடை ஒன்றின் அவசியத்தை சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும்  சுட்டிக்காட்டியிருந்தன. இந்தியாவும் சீனாவும் இது தொடர்பில்  ஆராய்ந்து பதில் அளிப்பதாக அறிவித்துள்ளன. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டியிருக்கும்   என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்  மேலும் பல நாடுகள் கலந்து கொண்டன. குறிப்பாக  அமெரிக்க திறைசேரியின்  உதவிச் செயலாளர் இங்கு வருகை தந்திருந்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து அங்கு எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதால் தான் எமக்கு இவற்றை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

இலங்கை அரசாங்கத்தின் வருமானம் தொடர்பில் முக்கிய விடயமொன்று இருக்கிறது. 2015ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்தபோது   ஆரம்ப வரவு செலவுத் திட்டத்தில்  மிகையிருக்க வேண்டும்  என எமக்குக் கூறப்பட்டது.

அந்த மிகையை 2017-2018ல்  காண்பித்தோம். எனினும், 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பால் அது குறைவடைந்தது. எனினும், அதனால்  பாரிய பிரச்சினை எதுவும்  ஏற்படவில்லை. ஆரம்ப வரவு செலவுத்திட்டத்தில் மிகையிருப்பதால் எமது    வருவாயை அதிகரிக்க முடியும் என்று  அவர்கள் நம்பினார்கள்.

அந்த சமயம் நமது வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5% – 15% வரை இருந்தது. ஆனால் இதை படிப்படியாக 17%-18% ஆக அதிகரிக்க முடியுமென்று நாம் அறிவித்தோம்.

எனினும்,  2019 நவம்பர் மாதமளவில் நமது நாட்டில் வரிகள்  வெகுவாகக் குறைக்கப்பட்டன. இதனால் அரசின் வருவாய் 8.5% மாக  குறைவடைந்தது.  ஒப்பந்தத்திற்கு முரணாக செயற்பட்டதால் சர்வதேச நாணய நிதியம்  உதவிகளை வழங்க முடியாது என அறிவித்தது.

அந்த ஆண்டு சுமார் 600, 700 பில்லியன் ரூபாய்களை இழக்க நேரிட்டது. அதே நேரத்தில், நாங்கள் கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலைமையே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணிகளாக அமைந்தன.

நமது ஆரம்ப  வரவுசெலவுத் திட்டத்தில் மிகையை காண்பிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு அறிவித்திருந்தது. அவர்களின் ஒத்துழைப்பு  எங்களுக்கு தேவை என்பதால் நாங்கள் அதற்கு உடன்பட்டிருந்தோம்.

அடுத்து, நாட்டின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5% இல் இருந்து 14.5% ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதனை ஒரேயடியாகச் செய்வது சாத்தியமில்லை. 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வருமானத்தை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

முதலில் நமது வருமானத்தை எப்படி அதிகரிப்பது  என்று சிந்திக்க வேண்டும். வருமானம் குறைந்ததால்தான் பணம் அச்சடிக்கப்பட்டது.கடந்த இரண்டு வருடங்களில் 2300 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் 70% – 75% வரை  உயர்ந்துள்ளது. மேலும் உணவுப் பணவீக்கம் அதனை விடவும் அதிகரித்துள்ளது.

 

இவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோன்று வருமானத்தை ஈட்டவும் வேண்டும். எனவே, இந்த பேச்சுவார்த்தைகளின் போது புதிய வரி முறை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஏற்றுமதி கைத்தொழில்களிடமிருந்து   வரி அறிவிட வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக, ஏற்றுமதி பொருளாதாரம் உள்ள நாடுகளில்   வரி செலுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் எமது பிரதான  ஏற்றுமதிப் பொருளாதாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் என அவர்கள் சுட்டிக்காட்டினர். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தேயிலை, தேங்காய், இறப்பர் போன்றவற்றுக்கும் வரி விதிக்கப்பட்டது.

எனவே, அந்த இலக்கை நோக்கி செல்வதற்கு வரி  செலுத்த  வேண்டும் என முடிவு செய்தோம்.   ஏற்றுமதி துறை தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. அவ்விடயங்கள்  சர்வதேச நாணய நிதியத்திற்கு சமர்ப்பிக்கப்படும். அது தொடர்பில் விளக்கமளிப்பது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம்.

 

இரண்டாவது விடயம் தனிநபர் வரி. நாம் பெரும்பாலும் மறைமுகமாகவே வரியைப் பெற்றிருந்தோம். நாட்டின் பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு   மறைமுக வரிகளைச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. தற்போது நமது நேரடி வரி வருமானம் 20 சதவீதம்  ஆகும். 80 சதவீதம் மறைமுகமான வரி   வருமானமாகப் பெறப்படுகிறது. எனினும், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பிரச்சினை ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளது. நேரடி வரி மூலம் பெறப்படும் வருமானம் 20 சதவீதத்திலும் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இல்லையேல் எமது இலக்கு வெற்றியளிக்காது என்றும் இந்நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கும் வரிச் செலுத்த நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

எனவே இதனடிப்படையில், 2026 ஆம் ஆண்டை இலக்காகக் கொள்வதற்காக,02 இலட்சம் வருமானம் பெறுவோருக்கு மட்டும் இந்த வரி அறவீட்டை மட்டுப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் திறைசேரியும் சர்வதேச நாணய நிதியமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. எனினும் அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. இதன் விளைவாக இறுதியில் ஒரு இலட்சத்தை விடவும் கூடுதலான வருமானத்தைப் பெறுபவர்களிடமிருந்து வருமான வரி அறவிட நேர்ந்தது. இதன் காரணமாக நாட்டில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியின்படி, இவ்வாறான வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் எமது இலக்கை அடைய முடியாமல் போகலாம் என்பதை நான் கூற விரும்புகின்றேன். 2026 ஆம் ஆண்டுக்குள் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரையிலான சதவிகிதத்தை வருமானமாக  பெறுவதே எமது இலக்காகும். எனவே நாம் இந்த வேலைத் திட்டத்திலிருந்து ஒதுங்கினால்,   சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் எமக்கு உதவி கிடைக்காமல் போய்விடலாம்.

சர்வதேச நாயண நிதியத்தின் உத்தரவாதம் கிடைக்காமல் போனால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்குவதாக கூறும் நாடுகளிடமிருந்து எமக்கு உதவிகள் கிடைக்காமல் போய்விடும். அவ்வாறு நிகழ்ந்தால், மீண்டும் வரிசைகளில் காத்திருக்கும் யுகத்துக்கே நாம் செல்ல நேரிடும்.

இதைவிடவும் மிக கஷ்டமான காலத்தை எமக்கு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இந்தக் கடன்களைப் பெற்றுக் கொண்டு, கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை நாம்  செயல்படுத்த வேண்டும். இவற்றை நாம் விரும்பிச் செய்யவில்லை. விருப்பமில்லாவிட்டாலும் கூட சில விடயங்களை எமக்கு செய்ய நேரிடுகிறது. என்றாலும் அந்த முடிவுகளை நாம் அவ்வப்போது பரிசீலித்து வருகின்றோம்.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும்  அதேநேரம், பெரும்போகத்தில் மிகச் சிறந்த அறுவடையும் கிடைக்குமாக இருந்தால் அதன் மூலம் சிறந்த பொருளாதார நன்மைகளை  ஈட்டிக்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். அப்போது எமக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார அழுத்தம் குறைவடையும்.

அதேபோன்று நாம் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்துக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம். இந்தச் செயற்பாடுகள் யாவற்றையும் முன்னெடுப்பதன் மூலம் எமக்கு முன்னோக்கிச் செல்லக்கூடியதாக இருக்கும்.

 

நாங்கள் தற்போது கடினமான கால கட்டத்திலேயே இருக்கிறோம்.இதுபோன்ற  கடினமான காலத்தில் நாம் கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும். வேறு யாரும் முன்வராத நிலையிலேயே நான் இந்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.   எனவேதான் இது தொடர்பில் அனைவருக்கும் விளக்களிக்க வேண்டியது எனது கடமையென்பதை நான் உணர்ந்தேன். இது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.