53 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு -வெளியான அறிவிப்பு!!
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதலாம் தவணைக்கு முன்பதாக அப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
53,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் இந்த ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அத்துடன் மாகாண மட்டத்தில் தனியான ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் வெற்றிடமாக உள்ள இடங்களுக்காக 4000 அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவ்வாறு அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டாலும் இந்த வருடத்தில் ஓய்வு பெற்று செல்லும் அதிபர்களுக்கு பதிலாக மேலும் வெற்றிடங்கள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.
எனினும் அந்த பிரச்சினைக்கு தீர்வாக கல்வித்துறையில் மூன்றாம் தரத்தில் உள்ளவர்களை அதற்கு நியமித்து அதிபர் வெற்றிடம் தொடர்பில் நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
2019ல் நடத்தப்பட்ட அதிபர்கள் பரீட்சைக்கிணங்க அவர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டது நேர்முக பரீட்சையில் புள்ளிகள் குறைவாக பெற்றுக் கொண்டவர்களை அதிபர்களாக நியமிக்க முடியாத நிலை காணப்பட்டதுடன் அவர்களில் 169 பேர் அது தொடர்பில் அடிப்படை உரிமை வழக்கு தொடுத்துள்ளனர்.
நாம் சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அந்த வழக்கு அடுத்த மாதம் முடிவடைந்ததும் இந்த பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் மயந்த திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை