மக்கள் வறுமையில் வாடும்போதும் ராஜபக்ஷக்கள் திருடுவதை நிறுத்தவில்லை – சரத்பொன்சேகா

 

நாட்டு மக்கள் வறுமையில் வாடுகின்ற போதிலும், ராஜபக்ஷகளும், அவர்களின் சகாக்களும் இன்று திருடுவதை நிறுத்தவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்களை மீளக் கொண்டுவருவது தொடர்பில் 22 ஆவது திருத்ததில் உள்ள விடயங்கள் வரவேற்கதக்கது. எனினும், அதற்கான நியமனங்களில் ஜனாதிபதியின் தலையீடு குறைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அமைச்சர்களை பதவி நீக்குதல், ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வகிக்காதிருப்பது தொடர்பான சரத்தை நிறைவேற்ற பொது வாக்கெடுப்பு வேண்டுமென உயர்நீதிமன்றம் அறித்துள்ளது.

இதற்கு முன்னராக திருத்தங்களில் இது ஏற்படாமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு மாறாக பாராளுமன்ற குழுக்கூட்டங்களில் திருத்தம் கொண்டுவருவது அரசியலமைப்பில் உள்ள ஒரு ஓட்டையாக கருதுகிறேன்.

திருத்தம் என்பது ஒரு நாடகமே தவிர மோசடி அரசியல்வாதிகளை திருத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை. மக்கள் துன்பத்தில் வாடும் சந்தர்ப்பத்தில் இதனூடாக அதிகாரத்துக்கு வர முயலும் சில செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

துரத்தியடிக்கப்பட்ட சிலர், மீண்டெழுவோம் என நாடளாவிய ரீதியில் கோசமிட்டு திறிகின்றனர். நாட்டையும் மக்களையும் சுரண்டிய குடும்பம் இன்னும் அதிகார பேராசையை கைவிடவில்லை. தமது எதிர்காலம் கருதி மக்கள் இதனை நம்பவேண்டாம்.

அண்மையில் நிலக்கரி கேள்விமனு விவகாரத்தில் மேற்கொள்ளப்படவிருந்த டொலர் மோசடி அமைச்சரவை தலையீட்டில் நிறுத்தப்பட்டது. இதனூடாக கோடிக்கணக்கான மோசடி இடம்பெறவிருந்தது.

தற்போது, எரிபொருள் வரிசை குறைந்ததாக கூறுகின்றனர். ஒதுக்கங்களை குறைத்து கூப்பன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாலும், விலை அதிகரித்ததால் அவற்றை நாடுவோர் எண்ணிக்கை குறைந்தமையாலுமே உண்மையில் வரிசை குறைந்துள்ளது.

மக்கள் பசியில் இருந்தாலும், ராஜபகஷக்களும் அவரது கூட்டாளிகள் திருடுவதை நிறுத்துவதாக இல்லை. ஊழல் அரசியல்வாதிகளை விரட்ட போராட்டமே அவசியம். கட்சி பேதமின்றி அனைவரும் முன்வரவேண்டும்.

ரணலை அதிகாரத்துக்கொண்டுவந்த செல்வந்தர்களும் வறுமையில் வாடும் மக்கள் மத்தியிலேயே வசிக்கின்றனர் என்பதை மறக்கக்கூடாது.

நாட்டின் தனிபநபர் வருமானம் 3,500 டொலர் எனக்கூறுகின்றனர். ஏனைய நாடுகளில் இது 40,000 – 50000 டொலராக காணப்படுகிறது. அவர்களுடன் ஒப்பிடுகையில் நாம் மிகவும் வறுமையில் உள்ளமை புலப்படுகிறது.

இங்கிலாந்தில் பாடசாலை மாணவர்கள் சாப்பாட்டு பெட்டி வெறுமையாக உள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் கூறினார். அவர் கடந்த காலத்தில் அங்கு சென்று பிச்சையெடுக்கும்போது, சாப்பாட்டு பெட்டிகளை அபகரித்து பார்த்தாரோ எனத் எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு பொறுப்பற்ற கதைகளை கூறுவோரின் வார்த்தைகளுக்கு ஏமாற வேண்டாம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.