தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்க! ஜனாதிபதியிடம் ஸ்ரீநேசன் கோரிக்கை
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு மூலமாக தமிழ் அரசியல் கைதிகள் 8 பேரை விடுதலை செய்தமையையிட்டுப் பாராட்டுவதாகவும், ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் தாமதிக்காமல் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதியை விநயமாகக் கேட்டுக்கொள்வதாக” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது,
விடுதலை செய்யப்படும் தமிழ் அரசியல் கைதிகள்
“விடுதலையான எமது தமிழ்ச் சகோதரர்களான கைதிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவியளிக்குமாறு அதாவது தொழில்களை வழங்கி உதவுமாறு தமிழ்த் தொழில் அதிபர்களையும், நல்ல தமிழ் குணவான்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.
தயவு செய்து புலத்துக்கு வெளியிலுள்ள தமிழ் உறவுகளும் இந்த விடயத்தில் கூடிய கவனம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
அந்தவகையில் வரதராஜன், ரகுபதி சர்மா, சுதா, நவதீபன், ராகுலன், காந்தன், இலங்கேஷ்வரன், ஜெபநேசன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை அறியக்கூடியதாகவுள்ளது.
இவர்கள் தமது குடும்பங்களோடு இணைந்து வேதனைகளை மறந்து மகிழ்ச்சியோடு வாழப் பிரார்த்திக்கின்றோம்.
மீண்டும் ஜணாதிபதியின் முன்மாதிரியான செயற்பாடுகளை வரவேற்பதோடு அந்தச் செயற்பாடு எதிர்காலத்தில் தொடர வேண்டும் என்பதையும் எதிர்பார்க்கின்றோம்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை