“5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கான தடையை மீண்டும் கொண்டு வாருங்கள்”
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ள இலங்கைத் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை தடை செய்யும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சிறுவர் மற்றும் பெண்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார் .
குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சிறுவர் உரிமை அமைப்புக்கள் மற்றும் அறிஞர்கள் வழங்கிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு இந்த திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் தாய்மார்களின் குழந்தைகளின் குறைந்தபட்ச வயதை 2 ஆண்டுகளாகக் குறைக்கவும், அதுவரை அத்தியாவசியமாக இருந்த குடும்பப் பின்னணி அறிக்கையை சமர்பிப்பதை இனி கட்டாயமாக்கக் கூடாது என்றும் ஜூன் 27ஆம் திகதி கூடிய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.
குழந்தைகளின் ஆரம்பக் குழந்தைப் பருவ வளர்ச்சியில் தாய் முக்கியப் பங்காற்றுவதால், தாய்மாரின்றி முதல் 5 ஆண்டுகளில் குழந்தைகளின் உகந்த உடல் மற்றும் மன வளர்ச்சி மோசமாகப் பாதிக்கப்படும் என்றும் அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டார்.
இதன்படி, வெளிநாடு செல்லும் தாய்மார்கள் சமர்ப்பிக்க வேண்டிய குடும்பப் பின்னணி அறிக்கையை கட்டாயமாக்கக் கூடாது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கு வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு வழங்குவது குறித்த தீர்மானத்தை மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை