8மாவட்டங்களில் சமஷ்டி அரசியல் தீர்வு வேண்டிய மக்கள் பிரகடனத்திற்கான ஒன்றுகூடல்.
சாவகச்சேரி நிருபர்
இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய 100 நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் நூறாவது நாள் மக்கள் பிரகடன ஒன்றுகூடல்கள் எதிர்வரும் 08/11/2022 வடக்கு-கிழக்கு மாகாணங்களிலுள்ள 8மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது.
புரையேறிக் கிடக்கின்ற தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான சமஷ்டி அரசியல் தீர்வு வேண்டி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு 8மாவட்டங்களில் குறித்த மக்கள் பிரகடன ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.
யாழ் மாவட்டத்தில் நல்லூர் சங்கிலியன் பூங்காவிலும், அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச பூங்காவிலும், கிளிநொச்சியில் பரந்தன் சந்தி இளைஞர் மட்டம் விளையாட்டு மைதானத்திலும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்/புனித சூசையப்பர் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும்,வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரசபை மைதானத்திலும்,திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை முத்தவெளி வெளியரங்கிலும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேசசபை விளையாட்டு மைதானத்திலும்,மன்னாரில் மன்னார் பொது விளையாட்டு அரங்கிலும் குறித்த மக்கள் பிரகடன ஒன்றுகூடல்கள் இடம்பெறவுள்ளன.
வடக்கு ,கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு கோரி முன்னெடுக்கப்படும் மக்கள் பிரகடன ஒன்றுகூடலில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.














கருத்துக்களேதுமில்லை