சாவகச்சேரியில் விபத்து மற்றும் அவசர சிகிட்சைப் பிரிவு; வடக்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

த.சுபேசன்
(சாவகச்சேரி)

90வருடங்களுக்கு மேலாக  தென்மராட்சிப் பிரதேச மக்களுக்களின் வைத்தியத் தேவையை செவ்வனே நிறைவேற்றி வரும் வைத்தியசாலையாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விளங்கி வருகிறது.இந்நிலையில் மக்கள் பணியில் மற்றுமோர் மைல்கல்லை அடையும் முயற்சியில் வைத்தியசாலையில் கடந்த ஆறாண்டு காலமாக நிறுவப்பட்டு 10/10/2022 அன்று திறந்து வைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிட்சைப் பிரிவு அலகானது வடமாகாண மக்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் விபத்துக்கள் வைத்தியத்துறைக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியிருக்கும் இவ் வேளையில் ஏ9 வீதியை மையமாகக் கொண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிட்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளமை உயிரிழப்புக்களை பெருமளவு தடுப்பதுடன்-அங்கவீனர்களையும் வெகுவாக கட்டுப்படுத்தி மிக குறுகிய நேரத்திற்குள் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிட்சை அளிக்கக்கூடிய வசதியினையும் ஏற்படுத்தித்தந்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் சுகாதாரத்துறை மேம்பாட்டுத்திட்ட நிதி,மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி மற்றும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்ட நிதி ஆகிய ஒதுக்கீடுகள் மூலமாக சுமார் 120மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விபத்து மற்றும் அவசர சிகிட்சைப் பிரிவிற்கான கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியன காரணமாக அரசாங்கத்தால் குறித்த கட்டத்திற்கான மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாத துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டிருந்தது.
இந்த இக்கட்டான தருணத்தில் கடந்த 4வருட காலமாக வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய திருமதி டயாழினி மகேந்திரன் தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்துடன் இணைந்து விபத்து மற்றும் அவசர சிகிட்சைப் பிரிவினை இயங்க வைக்க பல முயற்சிகளை எடுத்திருந்தார்.
அந்த தீவிர முயற்சியின் பயனாக தென்மராட்சி அபிவிருத்திக் கழகம்(சர்வதேசம்) மற்றும் சர்வதேச ரோட்டரிக் கழகம் ஆகியன இணைந்து 18மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வைத்தியசாலைக்கு வழங்கி சத்திரசிகிட்சைக் கூடத்தினை எந்தவித குறையும் இன்றி இயக்க வழிசமைத்துக் கொடுத்திருந்தனர்.
விபத்து மற்றும் அவசர சிகிட்சைப் பிரிவுக்கான கட்டடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் துரதிர்ஷ்டவசமாக நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் புதிய அலகிற்கான ஆளணி அங்கீகரிக்கப்படாமையால் உடனடியாக குறித்த அலகினால் முழுமையான சேவைகளை மக்களுக்கு வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.
ஆளணி நிரல் அங்கீகரிக்கப்பட்டு உரிய பணியாளர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில் தென்மராட்சிப் பிரதேச மக்கள் மாத்திரமன்றி பூநகரி,பளை,மருதங்கேணி உள்ளிட்ட வடக்கு மாகாண மக்கள் அனைவரும் குறித்த அலகினூடாக பயனடைய முடியும்.
தற்போது தென்மராட்சி மற்றும் பளைப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற வீதி விபத்துக்களில் சிக்கி காயப்படுபவர்களில் பெருமளவானோரை மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டிய கட்டாய நிலை காணப்படுகிறது.இதனால் மேலதிக சிகிச்சைக்காக யாழ் அனுப்பி வைக்கும் போது இடை வழியில் விபத்தில் சிக்கியோர் உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் ஏராளம் உண்டு.எனவே உரிய ஆளணி வளங்களுடன் சாவகச்சேரியில் விபத்து மற்றும் அவசர சிகிட்சைப் பிரிவு இயங்கும் பட்சத்தில் பெருமளவான விபத்து உயிரிழப்புக்களைத் தடுக்க முடியும்.
பிரதேச வைத்தியசாலையாக இருந்த சாவகச்சேரி வைத்தியசாலை கடந்த 2008 ஆம் ஆண்டு ஆதார வைத்தியசாலையாக தரமுயர்வு கண்டு தனது சேவையை மேலும் விஸ்தரித்து வரும் வேளையில் குறித்த மருத்துவ அலகு வைத்தியசாலையை மேலும் ஓர் படி முன்னேற்றியுள்ளது.
இதற்கு சாவகச்சேரி மருத்துவமனையில் கடந்த ஆறு வருட காலத்திற்குள் வைத்திய அத்தியட்சகர்களாக கடமையாற்றிய வைத்தியர் குகதாசன்,வைத்தியர் வினோபா, வைத்தியர் அச்சுதன்,வைத்தியர் குமரவேள் மற்றும் வைத்தியர் டயாழினி ஆகியோர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிட்சை அலகு வெகு விரைவாக ஆரம்பிக்கவுள்ள அதேவேளையில் கொரோனா பெருந்தொற்று வேளையில் வைத்தியசாலையின் கொரோனா சிகிட்சை மையம் ஊடாக 500மேற்பட்ட தொற்றாளர்களை குணமாக்கியிருந்தனர்.
அதேசமயம் குருந்தம் மருத்துவ அலகு ஊடாக ஆயிரக்கணக்கானவர்களை குடிப் பழக்கத்தில் இருந்து விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்த பெருமையும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பணியாளர்களேயே சாரும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.