கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் – ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு!
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது கைதிகள் 50 பேர் வரையில் தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதல் நிலைமை ஏற்பட்டிருந்தது.
கந்தகாடு மோதல்
இந்த மோதலில் 5 கைதிகள் காயமடைந்திருந்தனர். அதனையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இவ்வாறு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்புக்காக காவல்துறை மற்றும் இராணுவத்தினர் உதவிக்கு அழைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தப்பியோடிய கைதிகளைக் கண்டறிய உடனடியாக தேடுதல் குழு அனுப்பப்பட்டுள்ளது.
சரணடைந்த கைதிகள்
இந்தநிலையில், தப்பி ஓடியவர்களில் 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை