தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து – உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம்

வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் விபத்து இடம்பெறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னரே உணவுக்காக கடையொன்றில் அதிசொகுசு பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் பேருந்தில் பெரும்பாலானவர்கள் நித்திரை கொள்ளவில்லை.

விபத்து இடம்பெற்றபோது விழித்திருந்தமையால் பேருந்தின் கம்பிகளைப் பிடித்து அதிகளவானோர் உயிர்ச் சேதங்கள் இன்றி தப்பித்தனர் என விபத்துக்குள்ளான குறித்த அதிசொகுசு பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட அதி சொகுசு பேருந்து வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் அதிகாலை 12.20 மணியளவில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

3 பேர் உயிரிழப்பு 23 பேர் காயம்

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 4 பேர் நேற்று மாலை வீடு திரும்பினர்.

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவியான நாவலப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் சயாகரி (வயது – 23),

சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32),

இன்பர்சிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) ஆகியோரே உயிரிழந்தனர்.

உயிரிழந்த முதலாம் வருட மாணவியான சயாகரி, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் உயிரிழந்தார்.

இதேவேளை, நிதர்சன் வெளிநாடு செல்லும் பயண ஏற்பாட்டுக்காகக் கொழும்புக்குச் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

 

வடமராட்சியைச் சேர்ந்தவர் தெரிவித்ததாவது:-

 

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம் | Vavuniya Bus Accent Details

“இரவு 11.45 மணியளவில் கனகராயன்குளத்தில் உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டது.

சுமார் 10 அல்லது 15 நிமிடங்களில் அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. தேநீர் அருந்தி, உணவு உண்டமையால் பேருந்தில் பெரும்பாலானவர்கள் விழிப்பாகவே இருந்தார்கள்.

சுமார் 20 நிமிடத்தில் பேருந்து வளைவு ஒன்றில் திரும்பியது. இதன்போது பேருந்து கொஞ்சம் தளம்பியதை உணர முடிந்தது.

அந்த வளைவைத் தொடர்ந்து வந்த மற்றொரு வளைவில் மதகுடன் இதேபோன்று திரும்பும் போதே மோதியது.

அந்த மதகுடன் அமைந்திருந்த நடைபாதை போன்ற ஒற்றையடி பாதையில் பேருந்தின் ஒரு சில்லும், மதகின் மற்றைய பக்கத்துடன்பேருந்தின் பின்முனையும் மோதி சாரதியின் இருக்கைப் பக்கமாக பேருந்து சரிந்து விழுந்தது.

தூக்கி வீசப்பட்ட மாணவி, சாரதி

பெரும்பாலானவர்கள் விழித்திருந்தமையால் பேருந்து சரியும் போதே கம்பிகளைப் பிடித்து தப்பினர்.

சாரதியும், பல்கலைக்கழக மாணவியும் தூக்கி வீசப்பட்டு கல்லுடன் மோதுண்டிருந்தார்கள்.மற்றையவர், கண்ணாடி உடைந்து வெளியே விழுந்துள்ளார். அவர் மீதே பேருந்து சரிந்து வீழ்ந்தது.

பின்னால் இன்னொரு அதிசொகுசு பேருந்தும் வந்தது. அதுவும் தளம்பியவாறே வந்தாலும், சாரதியின் சாதுரியத்தால் விபத்திலிருந்து தப்பித்தது.

வீதியை விட்டு விலகினாலும் விபத்து ஏற்படவில்லை.

அங்கிருந்து ஓடிய நடத்துநர்

அந்த பேருந்தில் வந்தவர்களும் உடனடியாக உதவிகளைச் செய்து எமது பேருந்தில் பயணித்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.

பேருந்தின் நடத்துநர் இளைஞர் ஒருவரே. அவர் முதல் தடவையாக இந்த பேருந்தில் பணியாற்றினார்அவரும் எங்களுடன் கம்பியைப் பிடித்தே உயிர் தப்பினார்.

சாரதி உயிரிழந்ததைப் பார்த்ததும் பயத்தால் அவர் அங்கிருந்து ஓடி விட்டார்” – என்றார்.

3 அதிசொகுசுப் பேருந்து விபத்துக்கள்

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இந்த விபத்து உள்ளடங்கலாக நேற்று மாத்திரம் 3 அதிசொகுசுப் பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த விபத்தில் மாத்திரமே பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியா, நொச்சிமோட்டைப் பாலதுக்கு அருகில் விபத்துக்குளான அதிசொகுசு பேருந்தை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்ட போது ஏ – 9 வீதிப் போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகப் பாதிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.