வீட்டில் முதியோர்கள் இருப்பதே குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்-சுமந்திரன் எம்.பி

வீட்டில் முதியோர்கள் இருப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வினை அதிகரிக்கும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தென்மராட்சி-மறவன்புலோ பகுதியில் இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்;
எமது சமூகத்தில் வயதில் மூத்தோர்களை வழிகாட்டிகளாக நோக்குகின்றோம்.வேறு நாடுகளில் முதியோர்களுக்கு சில ஒதுக்கீடுகள் இருக்கின்றன.தனியான வசதிகள் காணப்படும்.குடும்பத்தோடு அல்லாமல் முதியோர் இல்லங்களில் வைத்து பராமரிப்பார்கள்.எமது நாட்டிலும் அந்த கலாசார தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.முதியோர்களை கவனிக்க வேண்டிய பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் வெளிநாடு செல்வதால் பராமரிக்க ஆட்கள் இல்லாமல் முதியோர் இல்லங்களை நாட வேண்டிய தேவை ஏற்படுகிறது.
ஆனால் பாரம்பரியமாக எமது வீடுகளில் முதியோர்கள் இருப்பது தான் வீட்டிற்கு நிலையான அந்தஸ்தைக் கொடுக்கும்.தாய்-தந்தை இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய காலகட்டம் இது.எனவே பிள்ளைகள் பாடசாலை விட்டு வரும் போது வீட்டில் முதியோர்கள் இருப்பது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்.பிள்ளைகள் மனச் சஞ்சலம்,அச்சம் இல்லாமல் வளரக்கூடிய பாதுகாப்பான சூழ்நிலையை இது ஏற்படுத்துகிறது.எங்கள் பாரம்பரிய முறைப்படி முதியோர்கள் வீட்டில் இருப்பது சுமை அல்ல அது எமக்கான ஓர் பெருமிதம்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்