ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!

COP 27 காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றுள்ள  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டேரஸை(Antonio Guterres)  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தேசிய சுற்றுச்சூழல் கொள்கை தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி ரணில் இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.

எகிப்தின் Sharm El Sheikh நகரில் இன்று(திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை COP 27 காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெறுகின்றது.

சர்வதேச நாடுகள் எதிர்நோக்கும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இடம்பெறும் மாநாட்டில் நாளையும்(07) நாளை மறுதினமும்(08) கலந்துகொண்டு ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

இதற்கு இணையாக சர்வதேச உணவுப் பாதுகாப்பு மாநாடு மற்றும் உலகத் தலைவர்களின் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

பரிஸ் உடன்படிக்கை மற்றும் சாசனத்தின் கீழ் இணங்கியுள்ளமைக்கு அமைவாக காலநிலை தொடர்பான உலகின் கூட்டு இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.

கடந்த வருடம் ஸ்கொட்லாந்தின் Glasgow நகரில் நடைபெற்ற COP 26 மாநாட்டில் கைச்சாத்திடப்பட்ட பரிஸ் உடன்படிக்கைக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இம்முறை மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் தினுக் கொலம்பகே, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோரும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.