வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’நூறாவது நாள் மக்கள் பிரகடனம்…

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு
அதிகாரப் பகிர்வு கோரிய நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாள் மக்கள்
பிரகடனம் வடக்கு – கிழக்கு
மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் இன்று வெளியிடப்பட்டது. இதில் யாழ். மாவட்டத்தில் சங்கிலியன் பூங்காவில் குறித்த மக்கள் பிரகடனம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பு வெளியிடப்பட்டது.

‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு
வேண்டும்’ எனும் 100 நாட்கள் செயல் முனைவுடைய மக்கள் குரலானது வடக்கு
கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் வடக்கு கிழக்கு
மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் இவ்வருடம்
ஆவணி முதலாம் திகதி முதல் இன்று வரை நடைபெற்று வருவதை தாங்கள்
அனைவரும் அறிவீர்கள்.

குறிப்பாக, 1948 இற்கு பின் இலங்கையில் ஆட்சிக்கு வந்த சிங்களப் பெரும்பான்மை
அரசுகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு வந்த இனவாத
அடிப்படையிலான அரசியல், பொருளாதார, சமூக, இன ரீதியான அடக்குமுறைகள்
மற்றும் வன்முறைகளின் காரணமாகவே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு
ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துள் மாகாண முறைமையிலான தீர்வு
வழங்கப்பட வேண்டும்.

தமிழ் மொழியும் அரச கரும மொழியாக அரசியலமைப்பின்
மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம்
உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும், திட்டமிட்ட வகையில் சிங்களப் பேரினவாத
சக்திகளால் 2006 இல் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகு பிரிக்கப்பட்டு
வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக்கப்பட்டன.

1987 இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலமான 13 ஆவது
திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

இந்தக் கால இடைவெளியில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன்
தமிழர்கள் மீது போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் இடப்பெயர்வு மற்றும்
பலவருடகால அகதிமுகாம் வாழ்வை அனுபவித்தனர்.

போரினால் இருப்பிடங்களும்
சொத்துக்களும், வாழ்வாதாரங்களும் மரங்கள் உட்பட முற்றாக அழிக்கப்பட்டன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது
செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல்
ஆக்கப்பட்டுள்ளனர். இராணுவ மயமாக்கம், திட்டமிட்ட முறையிலான நில அபகரிப்பு,
மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தலை இன்று வரையில் தமிழ்ச்
சமூகம் எதிர்கொண்டு வருகிறது.

எனவே, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக
எதிர்கொண்டுவரும் அரசியல் அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவந்து, சுய
கௌரவமுள்ள உரிமைகளுடன் கூடிய வாழ்வை வாழ்வதற்கு அடிப்படையான
நிலைபேறான அரசியல் தீர்வொன்றின் அவசியத்தை வலியுறுத்துகின்றோம்.

அந்த அடிப்படையிலேயே வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டுவரும் 100 செயல்முனைவானது ‘வடக்கு கிழக்கு மக்களுக்கு
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’எனும் மக்கள்
குரலின் ஊடாக முன்வைக்கப்படும் மக்கள் பிரகடனமாகவே ‘ஐக்கிய
இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்குள் மீளப் பெறமுடியாத
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு’ என்பது அமைந்துள்ளது.

எனவே வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இம் மக்கள்
பிரகடனத்திற்கான ஒன்று கூடலில் அனைவரும் பங்கேற்று தழிழ் பேசும் மக்களின்
கோரிக்கையை ஒரே குரலில் ஓங்கி ஒலிக்குமாறு கோருகிறோம் என குறித்த மக்கள் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்