தமிழினம் ஆயுதம் ஏந்தியது இதற்காக தான்..! சிறிலங்கா படை உடன் வெளியேற வேண்டும் – ரணிலிடம் இடித்துரைப்பு
மாவீரர் துயிலும் இல்லங்களை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா படையினர் அங்கிருந்து உடன் வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன் போது மேலும் உரையாற்றிய அவர்,
தமிழினம் ஆயுதம் ஏந்தியது ஏன்
“இந்த மாதம் தமிழர்களை பொறுத்தவரை முக்கியமான மாதமாக உள்ளது. இந்த தீவின் ஆட்சி அதிகாரத்தை பிரித்தானியர்களிடமிருந்து 1948 ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதம் பெற்றுக் கொண்ட பின்னர் தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகள் திட்டமிட்ட ரீதியில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
1977, 1983, 1987 கலவரங்கள் என்று படுகொலைகள் இடம்பெற்ற நிலையில் அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக தமிழினம் ஆயுதம் ஏந்திப்போராடியது.
அவ்வாறான ஆயுதப் போராட்டம் 37 ஆண்டுகள் நடந்துள்ளன. இந்த விடுதலைப் போராட்டத்தில் 50,000 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களை நினைவு கூறும் மாதத்தில் நாங்கள் நிற்கின்றோம்.
இந்த நிலையில் எங்களுக்காக உயிர் நீத்த அந்த மாவீர்களுக்காக ஒரு கணம் தலைசாய்த்துக்கொள்கிறேன்.
மாவீரர் நினைவேந்தல்
இந்த இடத்தில் அதிபர் இருப்பதால் சில விடயங்களை முன் வைக்க விரும்புகிறேன்.
நாங்கள் உறவுகளை நினைவு கூறும் வேளையில், அந்த உரிமைகள் மறுக்கப்பட்டு இராணுவத்தினரதும் காவல்துறையிரனதும் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அவை நடக்கின்றன.
மாவீரர் துயிலும் இல்லங்கள் பல இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி புனிதமான இடமாக அவற்றை பேணுவதற்கு இடமளிக்க வேண்டும் என்று கேட்பது, நினைவேந்தல் நடத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” – என்றார்
கருத்துக்களேதுமில்லை