மற்றுமொரு பொதுப் போராட்டத்தை நடத்த இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

அரசாங்கத்தை மாற்றும் நோக்கில் மீண்டும் ஒரு பொதுப் போராட்டத்தை நடத்த இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவம் மற்றும் ஆயுதப் படைகள் குவிக்கப்படும் எனவும், அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தமக்கு விருப்பமான பேரணிகள் மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு பொலிஸ் அனுமதிப் பத்திரத்தை கட்டாயம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். என ஜனாதிபதி தெரிவித்தார்.

அனுமதிப் பத்திரம் இன்றி நடத்தப்படும் எந்தவொரு ஆர்ப்பாட்டமும், பேரணியும், வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நிறுத்தப்படும் எனவும், இது தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல மதத் தலைவர்கள் போராட்டங்களை வெளிப்படையாகக் கண்டித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சில குழுக்களால் அவ்வாறான மதத் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக செய்திகள் உள்ளன எனவும் தெரிவித்தார்.

வன்முறையை தூண்டும் ஊடகங்கள் மற்றும் போராட்டங்களை ஊக்குவிப்பதை கண்டித்த ஜனாதிபதி, இந்த விடயம் தொடர்பில் தேவையான கலந்துரையாடல்களை நடத்தியதன் பின்னர் ஊடகங்கள் தொடர்பான ஆணைக்குழுவொன்றை நியமிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார்.

21ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுதல், தேவையான பல பாராளுமன்றக் குழுக்களை ஸ்தாபித்தல் போன்ற பல விடயங்கள் கவனத்திற்க் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதேவேளை வரவு செலவுத் திட்ட அலுவலகமும் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கத்தின் தற்போதைய முன்னேற்றத்தைப் பாதுகாப்பது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்