யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர், செயலாளர் விடுதலை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் செயலாளர் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை சட்டமா அதிபர் கைவாங்கியதை அடுத்து அவர்கள் இருவரும் இன்று வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மாவீரர்கள் ஆகியோரின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர், செயலாளர் விடுதலை | Jaffna University Students Union Court Order

பயங்கரவாத தடைச்சட்டம்

 

அதையடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அப்போதைய தலைவர் எம்.திவாகரன், அப்போதைய செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு தவணைகளின் விசாரணைகளின் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கை சட்டமா அதிபர் கைவாங்கியதை அடுத்து அவர்கள் இருவரும் இன்று வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இருவர் சார்பிலும் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.