யாழில் வீதியை மறித்து கேக் வெட்டிய இளைஞர்கள் கைது
தெல்லிப்பளை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வீதியை மறித்து கேக் வெட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கோப்பாய் பகுதியில் வசிக்கும் குறித்த சட்ட வைத்திய அதிகாரி தனது கடமையின் நிமித்தம் நேற்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்த வேளை , கோப்பாய் நாவலர் பாடசாலை முன்பாக மோட்டார் சைக்கிளில் நின்ற இளைஞர்கள் குழுவினர் வீதியை மறித்து பிறந்தநாள் தினத்தினை கொண்டாடிய வண்ணம் இருந்துள்ளனர்.
இளைஞர்கள் குழுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் , அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு இருந்தது. அதனால் சட்ட வைத்திய அதிகாரி தனது கடமைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்ட்டமையால் , அது தொடர்பில் கோப்பாய் காவல்துறைக்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 10 இளைஞர்களை கைது செய்ததுடன் , அங்கு நின்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது 10 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட பதில் நீதவான் , அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் திகதியிட்டார்.
கருத்துக்களேதுமில்லை