ஜஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த காவல்துறை அதிகாரி கைது!
ஜஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டில் காவல்துறை அதிகாரி ஒருவரும் ஓய்வுபெற்ற காவல்துறை உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று முன்தினம் (3) இடம்பெற்றுள்ளது.
தும்மல்லசூரிய காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வுப்பிரிவின் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை சேவையில் இருந்த ஓய்வுபெற்று தும்மல்லசூரிய ஹேனேகெதர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரும், கொழும்பு கிருளப்பனை காவல் நிலையத்தில் கடமையாற்றி வரும் காவல்துறை அதிகாரியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேக நபர்களிடம் ஐஸ் போதைப் பொருளும், 5 கிராம் ஹேஸ் போதைப் பொருளும் இருந்துள்ளன.
கிருளப்பனை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை அதிகாரியிடம் இருந்த சந்தேகத்திற்குரிய இலக்கத்தகடு பொருத்தப்பட்டிருந்த கார் மற்றும் அவர் குளிப்பிட்டிய பிரதேசத்தில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டையும் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.
அதேவேளை, இவர்களுக்கு போதைப் பொருள் கிடைத்த விதம் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்துவதற்காக சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்பு காவல் உத்தரவை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் அண்மைய காலமாக ஹெரோயின், ஐஸ் உட்பட ஆபத்தான போதைப் பொருட்களுடன் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
காவல்துறை திணைக்களத்தில் பணிப்புரியும் காவல்துறையினர் மத்தியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பரவல் மற்றும் பாவனையை தடுப்பதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காவல்துறையினர் மத்தியில் போதைப் பொருள் பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோர் இருப்பது பாரதூரமான நிலைமை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை