திருத்தப்பட்ட புதிய பாதுகாப்பு கொள்கை – கமால் குணரட்ண

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு கொள்கை முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

போர்க்களத்தில் வெற்றி என்பது சூழ்நிலைகளை புரிந்துகொண்டு வெற்றிபெறுவதற்கான துணிச்சல் கொண்ட தலைவரை பொறுத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு அதிகாரியின் தொழில்முறையுடன்  பின்னிப்பிணைந்த ஞானமும் அறிவும் முதன்மையாக கருதப்படுகின்றது என தெரிவித்துள்ள கமால் குணரட்ண ஒரு போரின் இறுதி நிலையை இவை தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வலுவான பாதுகாப்பு பொறிமுறையின் அவசியம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் பல வருடங்களிற்கு முன்னர் உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு கொள்கையை மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு கொள்கை மற்றும் மூலோபாயம் உள்ளடக்கிய எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தும் தேசிய பாதுகாப்பு பொறிமுறையை வலுப்படுத்துவதற்கான புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சுறுத்தல்களை தணிக்கவும் பாதுகாப்பான மற்றும் செழிப்பான நாட்டை உறுதி செய்யவும் செயல்ஊக்கம் மிக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேசிய பாதுகாப்பு இயந்திரத்திற்கு இது தெளிவான கட்டமைப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.