எங்கள் கடலையும் நிலங்களையும் யாரோ சிலரின் இலாபத்துக்காக தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் -அங்கஜன் இராமநாதன் காட்டம்.

சாவகச்சேரி நிருபர்
எங்கள் கடல் வளத்தையும் -நில வளத்தையும் யாரோ சிலரின் இலாபத்திற்காக தாரை வார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்
06.12.2022 செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவசாயம், கடற்றொழில், நீர்ப்பாசன துறைகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தனது உரையில்;

2023ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் இன்று விவசாயம், மீன்பிடி, நீர்ப்பாசனம் தொடர்பாக இங்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிட்டோம். 2023 தொடங்கியதுமே இந்த நாட்டில் சின்னவெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு வரப்போதை நாங்கள் மறந்துவிட்டோம்.

எங்கள் மாவட்டத்தில் இந்தாண்டு பெரும்போக பயிர்ச்செய்கை வழமைபோல நடக்கவில்லை. சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறி எதுவும் இம்முறை வழமைபோல பயிரிடப்படவில்லை. யாழ்ப்பாணத்தின் விவசாய நிலங்கள் புற்களும் புதர்களுமாக நிரம்பிக்கிடக்கிறது. இப்போது ஒரு கிலா 400 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரக்கறியையும் வாங்கமுடியாது. விரைவில் கையில் காசு இருந்தாலும் கடையில் காய்கறி இல்லாத நிலைதான் வரப்போகிறது.

அரசாங்கத்தை கேட்டால் விவசாயத்துக்கு வேண்டிய உதவிகளை செய்கிறோம், உரங்கள் வந்துள்ளன, கிருமிநாசினிகள் வந்துள்ளன, களைநாசினிகள் வந்துள்ளன என்று சொல்கிறார்கள். ஆனால் விவசாயிகளோ ஏராளமான பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.

யாழ். மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபை எனக்கு வழங்கியுள்ள கோரிக்கை கடிதத்தை நான் சபையில் சமர்ப்பிக்கிறேன்.

●மண்ணெண்ணையை தொடர்ந்து தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும்.

தற்போது மீனவர்களுக்கு மண்ணெண்ணை விநியோகம் இடம்பெற்றாலும், விவசாயிகளுக்கான விநியோகம் போதாது. இந்த வருட தொடக்கத்தில் 87 ரூபாய் விற்ற மண்ணெண்ணைகூட இப்போது பெற்றோலின் விலைக்கு கிட்ட வந்துவிட்டது. அதுவும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே அதற்கான மானிய பொறிமுறையை விரைவாக உருவாக்க வேண்டும்.

●விவசாயத்துக்கு மானிய விலையில் மண்ணெண்ணை வழங்க வேண்டும்.

ஏனென்றால் யாழ்ப்பாணத்தில் கிணறுகளில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் இறைக்க வேண்டிய நிலமைதான் உள்ளது. ஒரே நாளில் டீசல் அல்லது சோலர் அல்லது மின்சார பம்ப் இயந்திரங்களாக மாற்றக்கூடிய வல்லமை எங்களிடம் இல்லை. இதை நாங்கள் பல தடவைகள் எடுத்துக்கூறியும் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்?

●மேட்டுநில மரக்கறி விவசாயிகளுக்கு நியாய விலையில் உரம் வழங்க வேண்டும்.

●கிருமிநாசினி, பங்கஸ்நாசினி, களைநாசினிகளின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டும்

– விவசாயிகளுக்கு நியாய விலையில் அவற்றை வழங்க வேண்டும்.

●மரக்கறி விதைகளின் விலை 3 மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் ¼ ஏக்கர் மரக்கறி செய்கைக்கு 2 இலட்ச ரூபாய் மேலதிகமாக தேவைப்படுகிறது.

எப்போதும் விவசாயத்தை வாழ்க்கையாக கொண்டிருந்த எங்கள் மக்கள் இப்போது விவசாயமே போதும் என்ற விரக்தி நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த சபைக்கே தெரியும், எங்கள் மாவட்டத்தின் விவசாய புரட்சியினுடைய வரலாறு. தன்னிறைவு பொருளாதாரத்தை விவசாயத்தால் கட்டியெழுப்பியவர்கள் எங்கள் மக்கள். அவர்கள் இப்போதும் விவசாயத்தை கட்டியெழுப்ப தயாராக உள்ளார்கள். அவர்களுக்கு அரசாங்கம் ஆதரவாக இருக்குமா என்பதே இங்கு கேள்வி.

குறிப்பாக, வலிகாமம் கிழக்கு, வடமராட்சி தெற்கு பகுதிகளில் தற்போது மழைகால வெள்ளத்தால் பயிர்நிலங்கள் அழிந்து போகின்றன. இதற்கு தொண்டைமானாறு அணைக்கட்டை உரிய காலத்தில் திறந்து வெள்ளத்தை கடலுக்கு விடாததுதான் காரணமென விவசாயிகள் குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் அவ்வாறு நீரை தேக்கி வைத்திருப்பது நிலத்தடி நீரை பாதுகாக்க என்று நீர்ப்பாசனத்துறை தெரிவிக்கிறது. ஆகவே அந்த பிரதேசங்களில் உள்ள குளங்களை ஆழப்படுத்தி புனரமைத்தால் நிலத்தடி நீருக்கு தேவையான நீர் குளங்களில் தேங்க, மிஞ்சிய நீர் கடலுக்கு செல்லக்கூடியதாக இருக்கும்.

“வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திற்குப் பயன்படுத்தாது கடலைச் சென்றடைய விடமாட்டேன்” என்று பராக்கிரமபாகு மன்னன் சொன்னதை இந்த சபைக்கு நினைவுபடுத்துகிறேன்.

இப்படியிருக்க, இடைக்காடு, அச்சுவேலி, ஆவரங்கால், வாதரவத்தை கிராம விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைய தொண்டைமானாறு கடலால் வயல்களுக்கும் வரும் உப்பு நீரை தடுக்க, இடைக்காடு – வல்லை – வாதரவத்தை வெள்ளப் பாதுகாப்பு அணை அமைக்கும் திட்டத்தை, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆரம்பித்து வைத்திருந்தேன். இதற்கான நிதி ஜெய்க்கா நிறுவனத்தின் Rural Infrastructure Development Project ஊடாக வழங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை முழுமைப்படுத்த மொத்தமாக 100 மில்லியன் ரூபாய் தேவையாக உள்ளது.

இவற்றோடு கடந்த 2 ½ வருடங்களில் நீர்ப்பாசன செழுமை திட்டத்தில் எமது சிபார்சில் நடந்த குளங்களுடைய புனரமைப்பால் கடந்த ஆண்டும், இவ்வாண்டும் மழைக்கால பயிர் அழிவுகள் பெரிதும் குறைவடைந்துள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இப்போது மரத்தால்விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல எங்களது கடல்வளமும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. நாட்டின் மூன்றில் 1 பங்கு கடல்வளம் வடக்கில்தான் உள்ளது. ஆழ்கடல், குடாக்கடல், தரவைக்கடல், தீவுப்படுக்கைகள் என எல்லா வளங்களும் வடக்கில் உள்ளது. இவற்றையெல்லாம் பாதுகாத்த பாரம்பரிய மீன்பிடியைதான் எங்கள் மக்கள் செய்தனர். ஆனால் இன்று டொலரை கொண்டு வரும் கடல் அட்டை பண்ணைகள் வடக்கில் அதிகரித்துள்ளது. இதற்காக கரையோரங்கள் கணக்கில்லாமல் ஆக்கிரமிக்கப்படுகிறது. இதனால் கண்டல் தாவரங்கள் அழிந்து மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்படுகிறது. இப்போதுவரை வடக்கில் 616 ஏக்கர் வரை கடல் அட்டை உற்பத்தி நடைபெறுகிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தில் இயற்கையான கடலட்டைகளை பிடித்து பதப்படுத்தி வியாபாரம் செய்த உள்ளூர் வியாபாரிகள் இருந்தார்கள். ஆனால் அப்போது கடற்சூழலுக்கோ கடற்றொழிலாளர்களுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் இப்போது கடலட்டை குஞ்சுகளை பிடித்து பண்ணை அமைத்து செயற்கையாக இனப்பெருக்கம் செய்கிறார்கள். இயற்கையாக கிடைக்கும் வளத்தை அளவோடு பெறாமல் அளவுக்கதிகமாக ஆசைப்பட்டு இருக்கிற வளத்தையும் அழிப்பது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். மீனவர்கள் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள்.

இலவன்குடா கிராஞ்சி பிரதேசத்தில் மீனவர்கள் தொடர்ந்து 70 நாட்களாக போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள். அனலைதீவுக்கு அருகாக உள்ள பருத்தித்தீவில் அமைக்கப்பட்டுள்ள 50 ஏக்கர் கடலட்டைப் பண்ணையை அகற்றுமாறு யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனம் போராடுகிறது. ஆனால் இப்படி போராடுபவர்கள் மீது வழக்கு தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமது வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடும் மீனவர்கள்மீது பொய்வழக்குகள் தொடுத்து பழிவாங்குவது மகா மட்டமான அரசியலாகும்.

முதலில் இந்த விடயத்தை நாங்கள் ஆராய வேண்டும். எங்களுடைய மக்கள் கடல் அட்டையை சாப்பிடுவதில்லை, அவர்கள் சாப்பிடும் மீன்களை கூட பிடிக்க கூட ஏராளம் பிரச்சனைகள். இந்திய றோலர் மீனவர்களையும் தடுக்குமாறு எங்கள் மீனவர்கள் காலங்காலமாக கேட்கிறார்கள். இப்போது கடல்அட்டை வியாபாரமும் அவர்களை வஞ்சிக்கிறது.

கடலட்டை ஏற்றுமதியால் வரும் டொலருக்கு ஆசைப்பட்டு, எமது மக்கள் சாப்பிடும் மீன்களைகூட இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படப்போகிறோம். இப்போது சீசன் காலத்து மீன்கள் கூட சந்தையில் மலிவாக இல்லை. பாரை மீன் 1200 ரூபா, விளை மீன் 1000 ரூபா, முரல் மீன் 600 ரூபா, இறால் 1500 ரூபா, நண்டு 1600 ரூபா, கணவாய் 1200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இப்படியே நிலைமை போனால் எங்கள் மக்களையும் கடலட்டையை சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டிய நிலைதான் உருவாகும்.

மீனவர்களோ, நாங்களோ யாரும் கடல் அட்டை வியாபாரத்தை வேண்டாம் என்று கூறவில்லை. வாழ்வாதார மீனவர்களை கவனிக்காது வெறுமனே வர்த்தக மீன்பிடியை மட்டும் வளர்க்க வேண்டாம் என்கிறோம். டொலருக்காக கடற்றொழிலுக்கு சம்பந்தமே இல்லாதவர்களோடு கைகோர்க்க வேண்டாம் என்பதே மீனவர்களது கோரிக்கை. பரம்பரை பரம்பரையாக கடலையும், தொழிலையும் அறிந்த எங்கள் மீனவர்களுக்கு தொழில்நுட்ப, வர்த்தக உதவிகளை வழங்க வேண்டும். இதனால் உள்ளூர் மக்களின் கடல் உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து, மீனவர்களுக்கு ஏற்றுமதி லாபத்தையும் கிடைக்க வழி செய்ய முடியும். யாரோ ஒருவர் முழு லாபத்தையும் கொண்டு செல்ல எங்கள் கடல்வளத்தை அடகுவைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மீனவர்களோடு இணைந்து செயற்பட வேண்டிய கடற்றொழில் அமைச்சும் naqda போன்ற நிறுவனங்களும் தமக்கு எதிராக நிற்பதாக மீனவர்கள் கவலைப்படுகிறார்கள்.

எனவே எங்கள் வளங்களை பாதுகாத்த எங்கள் மக்களுக்கு துரோகமிழைக்காமல், எங்கள் வளங்களை தாரைவார்க்காமல் செயற்பட்டால் மட்டுமே, நாட்டின் பொருளாதாரத்தை நீண்டகாலத்துக்கு நிலைநிறுத்த முடியும். இல்லையென்றால் குறுகியகால வருமானம் மட்டுமே கிடைக்கும் ஒரு பிரபலமான திட்டமாகவே இவையும் அமையும் என்பதை ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.