உள்ளூராட்சி சபைகள் சுகாதாரத்துறையை நவீனமயப்படுத்த வேண்டும்-நகரசபை உறுப்பினர் விஜயேந்திரன்
சாவகச்சேரி நிருபர்
உள்ளூராட்சி மன்றங்கள் வீதி அபிவிருத்தியோடு மட்டும் நின்றுவிடாது ஏனைய உட்கட்டமைப்பு விடயங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் வீ.விஜயேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற அமர்வில் வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
ஓர் நாட்டினுடைய வரவு-செலவுத்திட்டம் வறுமையைக் குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக அமைய வேண்டும்.
அதுபோல உள்ளூராட்சி மன்றங்களுடைய வரவு-செலவுத்திட்டங்கள் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் உட்கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதாக அமைய வேண்டும்.
குறிப்பாக உள்ளூராட்சி சபைகள் சுகாதாரத் துறையை நவீனமயப்படுத்தி அதனை மேம்படுத்த வேண்டும்.நாம் சுகாதாரத் துறையை முன்னேற்றுவதில் தோல்வி கண்டுள்ளோம்.
அத்துடன் கல்வியை மேம்படுத்தவும் உள்ளூராட்சி சபைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எமது சாவகச்சேரி நகரசபை எதிர்காலத்தில் கல்வி மேம்பாட்டுக்காக பாதீட்டில் அதிகளவான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நன்னீரை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்.குளங்களை ஆழப்படுத்தி நன்னீரை சேமிக்க வேண்டிய தேவைப்பாடு நிலவுகின்றது.இருப்பினும் இவ்வாறான குள புனரமைப்பு விடயங்களுக்கு நிதி ஒதுக்குவது கிடையாது.எதிர்காலத்தில் இவ்வாறான உட்கட்டமைப்பு விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உட்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.
பல உள்ளூராட்சி மன்றங்கள் வீதியை மட்டும் இலக்காக கொண்டு 5வருடங்களாக இயங்கி வருகின்றன.வீதி விளக்கு பொருத்தல் விடயத்தில் கூட பல சபைகள் தோல்வி கண்டுள்ளன.தேவைப்பாடுடைய வேளையில் மக்களுக்கு தெரு விளக்குகளை திருத்திக் கொடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை