கைதடி கமநலசேவை நிலையத்தின் செயற்பாட்டினைக் கண்டித்து போராட்டம்.

சாவகச்சேரி
கைதடி கமநலசேவை நிலையத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் சிலற்றைக் கண்டித்து 08/12 வியாழக்கிழமை காலை தென்மராட்சிப் பிரதேச செயலகம் முன்பாக தனிநபர் ஒருவரால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலவச உரமானிய விடயத்தில் கைதடி கமநல சேவை நிலையம் மோசடி செய்வதாக தெரிவித்தே அவர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
இலவச உரமானியம் பெறத் தகுதியுள்ள விவசாயிகள் பட்டியலில் எனது பெரும்,எனது மனைவியுடைய பெயரும் இணைக்கப்பட்டிருந்தது.
உரத்தினை பெற நாம் கைதடி கமநல சேவை நிலையம் சென்ற போது எமக்கு உரம் வழங்கியதாக எம்மிடம் கையொப்பம் பெறப்பட்டு-குடும்ப அட்டையிலும் இலவச உரம் பெறப்பட்டதாக அடையாளம் பொறிக்கப்பட்டது.இருப்பினும் பின்னர் எனது பெயரிலும்-எனது மனைவியினுடைய பெயரிலும் 60பரப்பிற்கு மேற்பட்ட வயல் நிலம் இருப்பதாக தெரிவித்து உரம் தரப்படவில்லை.அத்துடன் உரம் தரப்பட்டதாக எம்மிடம் வாங்கிய கையொப்பம் மற்றும் குடும்ப அட்டையில் பொறித்த சீல் ஆகியவற்றையும் அழிக்க மறுத்திருந்தனர்.
இவ்வாறு பல விவசாயிகளுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பொதுவெளியில் அதனைக் கூற தயாரில்லை.
இந் நிலையில் இன்று நான் போராட்டம் செய்யப் போகிறேன் என்பதனை அறிந்த கமநல நிலையத்தினர் காலை வேளையில் என்னை தொடர்பு கொண்டு எனக்கும்-மனைவிக்கும் ஆளுக்கு ஒரு மூடை உரம் தருவதாகவும்,கைதடி கமநல நிலையத்திற்கு வருமாறும் தெரிவித்தனர்.இருப்பினும் நான் ஏனைய பாதிக்கப்பட்ட விவசாயிகளதும் நலன் கருதி அவர்களது அழைப்பினை நிராகரித்திருந்ததாகத் தெரிவித்திருந்தார்.
“அமெரிக்க USAID நிறுவனத்தினரே உங்கள் உதவியால் விவசாயிகள் முழுமையாக பயன் பெறுகிறார்களா? என்பதனை உறுதிப்படுத்துங்கள்.,
உரமானியத்தில் மோசடி செய்து ஏழை விவசாயிகளின் பட்டினச் சாவிற்கு வழி வகுக்காதே, கைதடி கமநல நிலையத்தில் உர விநியோகத்தில் பகற் கொள்ளையும்,பாரபட்சமும்” ஆகிய சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை காட்சிப்படுத்தி அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.