தாயால் கைவிடப்பட்ட ஒரு மாத குழந்தை சுகாதார வைத்திய அதிகாரிகளால் மீட்பு
காலி ஹபராதுவ பிரதேசத்தில் தாயால் கைவிடப்பட்ட ஒரு மாத குழந்தை சுகாதார வைத்திய அதிகாரிகளால் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பிரமோத சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
குழந்தையின் தாய் குழந்தையை தனது தந்தையின் வீட்டில் விட்டுச் சென்றதாகவும், பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் குழந்தை பெரும் துன்பப்படுவதாக சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தெரிய வந்ததையடுத்து, அவர் தனது பணியாளர்களுடன் அந்த வீட்டிற்கு சென்று குழந்தையை மீட்டுள்ளார்.
அருகில் உள்ள வீட்டில் இருந்து குழந்தைக்கு பால் கொடுக்கப்பட்டதுடன், குழந்தையை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக் குழந்தையின் தாய்க்கு 25 வயது. திருமணமாகி குழந்தை பிறந்தபின் குறித்த தாய் தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் இருந்துள்ளார். கடந்த 11ஆம் திகதி காலை ஹபராதுவ நகருக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற குழந்தையின் தாய் வீடு திரும்பவில்லை.
வீட்டில் குழந்தையின் தாத்தா மற்றும் பெண்ணின் சகோதரர்கள் மட்டுமே இருந்துள்ளனர் . அந்த சகோதரர்களில் ஒருவருக்கு 05 வயது. மற்றையவருக்கு 08 வயது. இந்த பெண்ணின் தாயும் வீட்டில் இல்லை.
இதுகுறித்து தகவல் கிடைக்கபெற்ற ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரமோதா சிறிவர்தன, ஹபராதுவ பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளுக்கு அறிவித்ததுடன் குழந்தையின் பெற்றோருக்கு எதிராக ஹபராதுவ பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை