அரசியல் தீர்வு காண விரைந்து நடவடிக்கை – சர்வகட்சிக் கூட்டத்தில் இணக்கம்

இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் அனைத்தும் இணக்கம் வெளியிட்டுள்ளன.
குறிப்பாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக வைத்து, ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் தீர்வை நோக்கி பயணிப்பதற்கு தென்னிலங்கை சிங்களக் கட்சிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன. அத்துடன், காணிப்பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விவகாரங்களுக்கு உடனடித் தீர்வை காணவும் சாதக சமிக்ஞைகள் வெளியிடப்பட்டுள்ளன.
நல்லிணக்கத்துக்கான விசேட சர்வகட்சிக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜே.வி.பி. மற்றும் விமல் அணி என்பன சர்வகட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்திருந்தன.
சுமார் இரண்டு மணிநேரம் வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாகவே விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் ஒரு சில வார்த்தைகளை மாத்திரமே ஜனாதிபதி ரணில் கூறியுள்ளார். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட்டேயாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதால், தற்போது சட்டத்தில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படக்கூடும், ஆனால், தீர்வு பற்றி இணக்கப்பாட்டு ஆவணத்தை வழங்கினால் அது நம்பகமாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
இப்போது உடனடியாக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலேயே இறுதித் தீர்வு அமைய வேண்டும் எனவும் கூட்டமைப்பினர் அழுத்தமாகத் தெரிவித்தனர். அதையொத்த கருத்தையே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் தெரிவித்தார்.
அதேபோல் காணிப் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பன உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.
“படையினர், வனவளத் திணைக்களம், மகாவலி அதிகார சபை என்பன ஆக்கிரமித்து வைத்துள்ள மக்களின் காணிகள் எதிர்வரும் சுதந்திர தினத்துக்குள் விடுவிக்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை வரவேற்கின்றோம். ஏனையோரும் விடுவிக்கப்பட வேண்டும்” எனவும் சம்பந்தன் இடித்துரைத்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் உடனடியாகக் கோரப்பட்ட தீர்வுகளுக்கு, நிறைவேற்று அதிகாரத்துறையில் இடம்பெற வேண்டிய பொறுப்பு உரிய வகையில் நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக இணக்கப்பாடொன்றுக்கு வருமாறு கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, சுதந்திர தினத்துக்கு முன்னர் அது நடக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். தீர்வு காண்பதற்கான ஒரு முடிவை எட்ட முடியவில்லையாயின் அதை எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் தான் அறிவிப்பார் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அமைச்சர் ஹாபீஸ் நஷீர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
அடுத்த சுற்றுப் பேச்சை ஜனவரி முற்பகுதியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனச் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்